உலகெங்கும் பரந்து வாழ்ந்திடும் தமிழர்களை இணைத்திட, அவர்தம் உரிமைகளை ஓங்கி ஒலித்திட உருவாக்கப்பட்டதுதான் நமது ‘ தமிழ்க்குரல்’.
தமிழன் இல்லாத நாடில்லை’ ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்ற கூற்றிற்கேற்ப தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் , தமிழ்ச்சமூகத்தின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ளும் வண்ணம் கருத்துக்களை ஏந்தி களமாட உருவானதுதான் தமிழ்க்குரல்.
அரசியல், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, மொழி, கல்வி, உலக அறிவு, சுகாதாரம், வணிகம், மருத்துவம், இலக்கியம், சட்டம், நடப்பு அரசியல் அனைத்து துறைகளிலும் அரசியல் ஆட்கொண்டு நிற்பதை தக்க ஆதாரங்களோடும், விவாதங்களோடும் தமிழ்ச்சமுகத்திற்கு எடுத்தியம்பும், தமிழர்களின் சிறப்பான எதிர்காலத்தை தீர்மானிக்க உதவும் ஊடகமாக இது விளங்கும்.
இன்றைக்கு அனைத்து முன்னணி ஊடகங்களும் இந்துத்துவ- தேசியவாத பெருநிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவைகளை அடக்குமுறை மூலமாகவும், பணபலம் மூலமாகவும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்டு, தமிழர்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது நாம் அறிந்ததே.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்ச்சமூகத்திற்கான ஒரு சுதந்திர ஊடகத்தை நிறுவுவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அவசியமாக மாறியிருக்கிறது
துணிவோடு நிற்பதால் நாம் எதிர்க்கொள்ளும் இன்னல்கள் பல. இருப்பினும் தமிழ்ச்சமூகத்தின் ஏற்றத்திற்கும், வலிமைக்கும் தேவையான ஊடகத்தை சுதந்திரமாக அழுத்தமில்லாமல் செயல்படுத்திட வேண்டுமென்றால் தமிழ்ச்சமூகம் தனது ஆதரவை வழங்கிடல் வேண்டும்.
தமிழ்ப் புரவலர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், பற்றாளர்கள் தமிழ்க்குரல் ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதனை வலிமையான ஊடகமாக கட்டியமைக்க முழுமையான ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கினால் தமிழ்க்குரல் தமிழ்ச்சமூகத்திற்காக உறுதியாக நின்று பாடுபட, போராட இயலும். வாள் முனையை விட வலிமையானது பேனா முனை என்பார்கள், ஆயதத்தில் சிறந்த ஆயுதம் கருத்தாயுதமாகும். தமிழ்ச்சமூகத்தின் நலனுக்காக தமிழ்க்குரல் தொடர்ந்து ஒலித்திட தமிழர்கள் அனைவரும் தங்களது பேராதரவினை நல்கி துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
நன்றி.