கல்லூரி முடித்த சமயம், வீட்டில் அண்ணன் வாங்கி வைத்த ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூல் இருந்தது. போர் அடித்ததால் படித்து முடித்தேன். நூலில் என்ன இருந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் தெரியும். இப்போது படித்தால் அதில் கண்ணதாசன் என்னென்ன காமெடி பண்ணியிருக்கிறார் என்று தெரியும். ஒருவேளை அந்த நூல் இன்னொரு முறை கிடைத்தாலும் கூட படிப்பேனா என்று தெரியவில்லை. படிக்க வேண்டுய நூல்களின் பட்டியல் மிக அதிகமாய் இருக்கிறது. கண்ணதாசனின் அந்த நூலுக்கு பதிலடியாக தோழர் மஞ்சை வசந்தன் எழுதிய ‘அர்த்தமற்ற இந்து மதம்’ வெளியாகி இருக்கிறது. அந்த நூலினை படிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் அதுவும் ஒன்று. அது ஒருபுறம் இருக்க, கண்ணதாசனின் நூலுக்கு இந்த நூல் மிகச்சரியான பதிலாக இருக்கும் என்று அதை படிக்க படிக்க தோன்றியது.
‘அறியப்படாத இந்து மதம்’. நூலாசிரியர் திராவிடர் கழகத்தை சேர்ந்தவரோ நாத்திகவாதியோ அல்ல. சமூக ஊடகங்களில் பலமுறை பேட்டி கொடுத்த தினகரன் செல்லையாவை பார்த்திருப்பவர்களுக்கு தெரியும் அவர் ஆத்திகவாதி என்று. ஒரு ஆத்திகவாதியான பகுத்தறிவுவாதி, தன் மதத்தை சரியான தராசில் வைத்து பார்த்தல் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த நூல். எந்த வித விருப்பு வெறுப்பும் இல்லாமல், எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் அந்த நூலை படித்தால் நீங்கள் நாத்திகவாதியாக எல்லாம் மாற மாட்டிர்கள். ஆனால் அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது கொஞ்சம் நெருடல் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இதெல்லாம் ஹிந்து மதத்தின் பெருமையாக சொல்லப்படுகிறதோ அதை எல்லாம் ஆதாரங்களுடன் சுக்குநூறாக உடைத்திருக்கிறார். தலையில் இருந்தும், தோளில் இருந்தும், தொடையில் இருந்தும் காலில் இருந்தும் பிறந்த(?) மனிதர்களை வகைப்படுத்தும் வேதத்தை அம்பலப்படுத்தியுள்ளார். செல்லும் இடமெல்லாம் சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆளுநர் RN ரவி, என்றைக்காவது அந்த சனாதனம் என்ன சொல்கிறது என்று பேசி இருக்கிறாரா? பல குழந்தைகளின் உயிரையும் வாங்கும் ‘நீட்’ பரீட்சை அந்த சனாதனத்தின் நீட்சி என்பதை அறிந்து கொள்ள இந்த நூலை படித்தே ஆக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை தடுக்க ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்லும் ஹிந்து மதம், அந்த கோவில்கள் மற்ற மக்களுக்காகவேனும் உள்ளதா என்றால், இல்லை என்று தான் வரலாறு சொல்கிறது. பிறகு யாருக்கானது கோவில்கள்? அரசனுக்கும், பார்ப்பனர்களுக்கும் ஆனவை. அங்கு தான் நாம் positive vibes ஐ தேடி செல்கிறோம். அதனால் என்ன, உள்ளே கடவுள் இருக்கிறாரே அதனால் செல்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்களேயானால், ஒவ்வொரு நாளும் சூத்திரர்கள் கோவிலுக்குள் சென்று தீட்டு ஏற்படுத்துவதால் பூஜை என்னும் பெயரால் தீட்டு கழிப்பதை அறிந்தால் எந்த சுயமரியாதை உள்ள நாத்திகவாதியும் இன்னொரு முறை அந்த கோவிலுக்குள் செல்ல தயங்குவான்.
வேதங்களில் மட்டுமில்லை, சிவபுராணத்தில், மஹாபாரதத்தில் பெண்களை இதற்கு மேலும் இழிவு படுத்த முடியுமா என்னும் அளவிற்கு, கொச்சையான செய்திகள் கொட்டி கிடக்கின்றன. ஒரு பெண்ணை இந்த மத நூல்கள் கேவலப்படுத்துவதை போல, எந்த திரைப்படமும் கூட கேவலப்படுத்தியதில்லை. ஒரே கடவுளாகிய சிவபெருமானின் லிங்க உருவம் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது. ஏன் என்று கேட்டால் அதற்கு ஒரு சிவபுராண கதையை சொல்வார்கள். உண்மையான காரணத்தை இந்த நூல் விவரிக்கிறது. அந்த அத்தியாயத்தின் தலைப்பு ‘சிவலிங்கத்தில் சதி ….sorry …சாதி’. தலைப்பே பதில் கொடுத்துவிடுகிறது. ஹிந்து மதம் என்பது சாதியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை இதை விட வேறு எப்படி விளக்க முடியும்!
ஹிந்து மதம் அஹிம்சை மதம். ஆனால் மிருகங்களை மட்டும் கொஞ்சமாக சித்ரவதை செய்து யாகம் வளர்க்கும் அவ்வளவு தான். சைவர்கள் கொண்டாடும் பெரியபுராணத்தில் அடிக்கும் ரத்த வாடை , படிக்கும் போதே நம் கைகளிலும் ஒட்டி கொள்ளும். மண், மரம் , கல், உலோகம் , கோவில் , தெய்வம் என்று ஹிந்து மதமெங்கும் ஜாதியை தவிர வேறேதும் இல்லை.
என்னங்க நீங்க , சும்மா அடுக்கிகிட்டே போறீங்க , இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என்று கேட்டால் , இந்த நூலில், இந்த பக்கத்தில், இந்த வரியில் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இந்த நூலிலேயே, எல்லா ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நூலில் பாதி ஆதாரங்களை கொண்ட பக்கங்கள் தான்.
இப்படி ஒரு நூலிற்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் , அந்த நூலுக்கு தான் என்ன மதிப்பு. இந்த முறை எதிர்த்தது பிஜேபி இல்லை. சிட்னி தமிழ் மன்றத்தில் இந்த நூலின் பற்றி நூலாசிரியரை பேச விடாமல் தடுக்க பார்த்தது, நாம் தமிழர் தம்பிகள். தூய தமிழ் தேசியம் யாருக்கானவர்கள் என்பதையும் சேர்த்தே இந்த நூல் அம்பலப்படுத்தி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
இது வெறும் பாகம் 1 தான். இரண்டாம் பாகத்திற்கு நாத்திகர்களும் , ஜாதி மறுப்பாளர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம்.