ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் வந்த ஒரு குடும்பம் தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில், சிறுவர்கள் இருக்க, அவர்களிடம் இருந்த வெளிநாட்டு சாக்லேட்களை அந்த சிறுவர்களுக்கு ஆசையாக கொடுத்திருக்கிறார் அந்த குடும்பத்தின் வயதான தாய். அந்த பாசத்திற்கு அந்த ஊர் மக்கள் அவர்களுக்கு ஒரு பரிசை தந்தார்கள். அது மரணம்.
குழந்தைகளை கடத்தும் கும்பல் உலா வருகிறது என்ற வதந்தி வேகமாக பரவ, அதன் பாதிப்பாய் பல உயிர்கள் பறிக்கப்பட்டது. அதில் ஒரு உயிர் தான் அந்த அம்மா. அது சில மாதங்களுக்கு தான். பிறகு வதந்தி நின்று போனது. கூடவே மரணங்களும். ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா என்று ஆராய எல்லாம் நமக்கு நேரம் இல்லை. உடனே அதை மற்றவர்களுக்கு forward செய்து விடவேண்டும். இல்லை என்றால் மண்டை வெடித்துவிடும்.
இப்படிப்பட்ட வதந்திகள் சமீபத்திய தொடர்ச்சி தான் வடமாநில தொழிலாளிகள் மேல் நடத்தும் தாக்குதல்கள். ஒருவேளை சோற்றிற்கு வழியில்லாமல், மனைவி ,மக்கள், ஊரை விட்டு தமிழ்நாட்டிற்கு அவர்கள் வருவது நம் சோற்றில் மண்ணள்ளி போட அல்ல. அவர்களின் தேவை எல்லாம் உயிர் வாழ தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொஞ்ச சோறு தான். வடமாநில தொழிலாளிகள் மூலம் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்ற தவறான கருத்து பல வருடங்களாகவே பரவி வந்தாலும், இப்போது தான் உச்சகட்டத்தை நெருங்கி இருக்கிறது.
ஆனால் என்ன, உண்மையில் தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்கிற எந்த ஒரு பணக்கார வடமாநிலத்தவரும் இதுவரை தாக்கப்பட்டதில்லை. கூலிக்கு வேலைக்கு போகின்றவர்களை தாக்குவது தான் மிக எளிது. கேட்க ஆள் இல்லை. அவர்கள் இறந்தது கூட தெரியாமல் அவர்கள் அனுப்பும் சொற்ப பணத்திற்கு அவன் குடும்பம் காத்திருக்கும்.
இந்திய சட்டம் நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச பணி நேரத்திற்கு விட அதிகமாகவும், குறைந்த பட்ச கூலியை விட குறைவாக வாங்கும் அவர்கள் எந்த விதத்தில் தமிழர்கள் உரிமையை பறித்துக்கொண்டார்கள் என்பதை இந்த தாக்குதலை ஆதரிப்பவர்கள் தெரிவிக்க வேண்டும். இது பரவி இப்போது ஒரு கல்லூரியிலே பணி புரியும் வடமாநிலத்தவரை மாணவர்கள் தாக்கியுள்ளார்கள். JNU வில் தமிழ் மாணவர்களை தாக்கியதை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதே அளவுகோளில் தான் இந்த தாக்குதலையும் எதிர்க்க வேண்டும்.
ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த அனைத்து வந்தேறிகளும் மற்றவர்களை பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது எவ்வளவு முரண். முதலில் தமிழர்களின் உண்மையான எதிரி யார் என்பதை தமிழர்கள் தங்கள் சுய சிந்தனை மூலம் அறிந்து கொள்ள வேண்டும். வாட்ஸாப் வந்தந்திகள் மூலம் பாடம் படிக்க கூடாது. வடமாநில கொள்ளையர்கள் இருக்கிறார்கள் தான் மறுப்பதற்கில்லை. தமிழர்களில் கொள்ளை அடிப்பவர்கள் இல்லவே இல்லையா?
உலகம் முழுவதிலும் இரண்டே இரண்டு வர்கம் தான். பணக்கார வர்கம் – ஏழை வர்கம், அடக்கும் வர்கம் – அடக்கப்படும் வர்கம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாடி பெருமை பட்டு கொண்டால் மட்டும் போதாது. முதலில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியையும், பிரிட்டனின் பிரதமரையும் பதவி விலக சொல்லி , இந்தியாவிற்கு அழைத்து வந்த பிறகு, வடமாநில தொழிலாளிகளை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றலாம்.
தமிழன் பிற நாட்டை ஆண்டால் பெருமை, அடுத்த மாநிலத்தவர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்தால் வன்முறை.
சுமதி விஜயகுமார்