இன்றைய காலத்தில் இராவணன் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் சீதையை கடத்திச் சென்றது ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. ஆனால் பக்தி இயக்கக் காலத்தில் இராவணன் என்று சொன்னால் தேவார மூவருக்கு இராவணன் கைலாயத்தை பெயர்க்க முற்பட்ட காட்சி தான் நினைவுக்கு வந்திருக்கிறது. அதன் தாக்கத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனது பதிகங்களில் முறையே பத்தாவது மற்றும் எட்டாவது பாடலாக பல இடங்களில் இராவணனைப் பற்றி பாடியுள்ளனர். ஆனால் எங்குமே வால்மீகி இராமாயணக் காவியத்தின் பிரதிபலிப்பு இல்லை. மாறாக வால்மீகி இராமாயணக் காவியத்தில் இடம்பெறாத ஒரு சம்பவமே தேவாரத்தில் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டம் பிற்சேர்க்கை)
இராவணன் ஒரு சிவபக்தன். தனது பக்தியை மெச்சும் விதமாக கைலாய மலையை பெயர்த்து தான் ஆளும் இலங்கைக்கு கொண்டு செல்ல முற்படுகிறான். இராவணனது நோக்கம் தான் ஆண்டுக்கொண்டிருக்கும் நாட்டில் இறைவன் எழுந்தருள வேண்டும் என்பது தான். ஆதலாலேயே கைலாய மலையை பெயர்க்க முற்படுகிறான். இதனை செருக்காக எண்ணி இறைவன் தனது கட்டை விரலால் இராவணனது தலையை அழுத்துகிறார். இதனால் அவனது சில தலைகள் நசுங்கி சிதறுகின்றன. அவ்வலியை தாங்கமாட்டாமல் வீணை இசைத்து சாம கீதம் பாடி இறைவனை சாந்தப்படுத்துகிறான் இராவணன் எனும் பொருளில் திருஞானசம்பந்தர் பெரும்பாலான தனது பதிகங்களில் பதிவு செய்கிறார்.
ஆனால் திருநாவுக்கரசர் இதே புராணத்தினை வேறு விதத்தில் எடுத்துச் சொல்கிறார். இராவணன் ஒரு சிவபக்தன். தனது பக்தியை மெச்சும் பொருட்டு கைலாய மலையினை பெயர்த்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறான். இராவணன் வலுக்கொண்டு மலையினை பெயர்க்கும் போது அதன் அதிர்வில் உமையம்மை அஞ்சி நடுங்கி தனது கணவனை ஆரத்தழுவுகிறாள். தனது மனையாள் நடுங்குவதை எண்ணி இறைவன் தனது பெருவிரலால் ‘மெல்ல மெல்ல’ என்று கூறுவதைப் போன்று இலங்கை வேந்தனின் தலையை அழுத்துகிறார். இதனால் இராவணனின் சில தலைகள் சிதறுண்டு போயின. அதன் வலியை தாங்கமாட்டாமல் வீணை இசைத்து சாம கீதம் பாடினான் இராவணன் என்ற பொருளில் பாடுகிறார்.
பார்க்க: தேவாரம் 4.47.10 , 4.30.10 etc..
மேற்கண்ட தேவார பாடல்கள் சுட்டும் நிகழ்வு பவபூதி எழுதிய உத்தர இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. இந்த உத்தர இராமாயணமே இராமனின் மகன்களான இலவன், குசன் பற்றிய குறிப்புகளை தருகிறது. இதுவே தென்னிந்திய அளவில் இடைக்கால சோழராட்சி வரையில் வெகுமக்கள் அறிந்த இராமாயண காவியமாக தெரிகிறது. திருமாலை பின்னிருத்தி சிவனை முன்னிருத்துவதற்காகவே உத்தர இராமாயணம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என ஊகிக்க முடிகிறது. பின்னர் வால்மீகியை தழுவி கம்பராமாயணம் படைக்கப்பட்ட பிறகே விஜயநகர/நாயக்க மன்னர்களின் காலத்தில் வால்மீகி இராமாயணக் காவியம் தென்னிந்திய அளவில் புகழ்பெறுகிறது. பிற்கால விஜயநகரத்தினர் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றியதால் இராமாயண காவியம் திருமாலை முன்னிருத்தி திருக்கோவில்களில் சிற்பங்களாகவும் கூத்து வடிவில் நாடகங்களாகவும் பரவியதை கல்வெட்டுகளினூடாகவும் நாயக்கர் கால பாணியில் எழுப்பப்பெற்ற நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களின் புடைப்புச் சிற்பங்களினூடாகவும் பார்க்க முடிகிறது.
படம்: திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோவில்.
பி.கு: இராவணன் கைலை மலையை பெயர்க்க உமை அஞ்சி தன் பதியை ஆரத்தழுவும் இச்சிற்பம் முற்கால சோழர் கலைப்பாணியை சேர்ந்தது.