கட்டுரையின் தலைப்பை பார்த்த உடனே பலத்த கண்டனங்களை பலரும் தெரிவிக்க காத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. இந்த தலைப்பின் கருத்தை படிக்காமல் எப்படி நீங்கள் தலைப்பை வைத்து மட்டுமே கருத்து கூற முடியும்.அதனால் கட்டுரையை முழுவதும் படிக்கவும் பிறகு உங்களது மேலான கருத்துகளை அள்ளி தெளிக்கவும்.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். வெகு ஜன பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் மாத சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்திடம் வேலை பார்த்து தான் தனது பொருளாதார தேவைகளை தீர்த்துகொள்கிறார்கள். ஆனால் இங்கு வலதுசாரிகள் மட்டுமின்றி நடுநிலை சாமானியர்கள் கூட பத்திரிகையாளர்களை ‘காசுக்கு தான இவ்வளவு போராட்டம், கொடுக்குற காச வாங்கிட்டு போங்கப்பா’, ‘ அதான் ஆயிரகணக்குல சம்பளம் வாங்குறீங்க அப்புறம் எதுக்கு எம்.எல்.ஏ. மினிஸ்டர் பின்னாடி சுத்துறீங்கனு’ அப்படி இப்படினு அவங்க டீ குடிக்கிற 10 நிமிடம் , டிவி பார்க்குற 10 நிமிடத்தில் போகிற போக்கில் ஒரு முத்திரை குத்திவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் நீங்கள் பத்து நிமிடம் வாசிக்க கூடிய செய்தி பேப்பர் , செய்தி ஊடகத்திற்கு தான் நாங்கள் நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் வாழ்க்கை கட்டமைப்பை சினிமா வேறு விதமாக காட்டிவிட்டது. நம்ம ஊரு மக்கள் தான் சினிமா வருவதையும், வாட்ஸ்அப்பில் வருவதையும் அப்படி நம்பி விடுகின்றனர்.
உண்மை நிலை என்னவென்று யாருக்கும் தெரியாது. பலர் தங்களது வாழ்க்கையை கத்தியின் மேல் நடப்பது போல தான் நடந்து கொண்டிருகின்றனர். நீங்கள் விமர்சனம் செய்யகூடிய அனைவரும் பெரிய அச்சு ஊடகம் காட்சி ஊடகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.அவர்கள் மீது விமர்சனம் வைக்கலாம் தவறு கிடையாது, யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.ஆனால் விமர்சனம் என்ற பெயர் சகட்டுமேனிக்கு பேசுவதை எப்படி சகித்து கொள்வது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி ஊடகவியலாளர்கள் பலர் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் இருந்து தூக்கப்பட்டனர்.அதற்கு எந்த சாமானியராவது குரல் கொடுத்தார்களா அவர்கள் எங்களுக்காக தான் அங்கு பேசுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்களா ????.
கண்ணுக்கு நேரே நடக்கும் இந்த தவறையே மக்களால் உணர முடியவில்லை என்ற போது, கடைநிலை பத்திரிகையாளர்கள் ஊடகவியாலாளர்கள் குறித்து நீங்கள் எப்படி அறிவீர்கள். ஆனால் இங்கு தான் ஒரு மீடியா மாபியா நடக்கிறது. அதனையும் நாம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் இது போன்று செய்பவர்களை கட்டாயம் அடையாளபடுத்துவோமே தவிர இவர்களை எல்லாம் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று வக்காலத்து வாங்க மாட்டோம். சரி இந்த மீடியா மாபியாக்களால் சாதாரண பத்திரிகையாளர்கள் எப்படி பாதிக்கிறார்கள் என்று எடுத்து கூறினார்கள் முதலாளி பெருச்சாளி ஆன கதை தெரியவரும்.
இங்கு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கும் போது மூலைக்கு ஒரு பத்திரிகை நிறுவனம் மன்னிக்கவும் நிறுவனம் என்ற பெயரில் ஒரு ஒன் மேன் ஷோ என்று வைத்து கொள்ளலாம்.ஒரு பத்திரிகையை தங்களது பெயரில் வைத்துகொள்கின்றனர். வார பத்திரிகையை தினசரி பேப்பர் போல நான்கு பக்கத்தில் வெளியில் உள்ள அச்சகத்தில் நூறு காப்பி அடிகின்றனர். இப்போது பத்திரிகைக்கு கன்டென்ட் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் நாமும் சம்பாதிக்க வேண்டும். வி.ஏ.ஓ, தாசில்தார் ,பியூன் ,கார்பரேஷன் அதிகாரி, பிரைவேட் காண்ட்ரேக்டர்களை மிரட்டுவது. அதனை செய்தியாக்கி விட்டுவிடுவோம் மானம் போய்விடும், மரியாதை போய் விடும் என்று பேரம் பேசுவது. அந்த விலைக்கு ஒத்து வரவில்லை என்றால் செய்தியை பப்ளீஷ் செய்துவிட்டு விலையை ஏற்றி வாங்குவது.
இதனால் தான் பாருங்கள் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தும் இ.எம்.ஐ கட்ட முடியாமல் திணறும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சொகுசு கார் , மடிப்பு கலையாத வெள்ளை சட்டை என தன்னை மற்றவர்களிடம் இருந்து தணித்து காட்டிக்கொண்டு வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருகின்றனர். இதில் ஒரு உண்மை சம்பவத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
மதுரையை சேர்ந்த ஒரு நபர். பெயர் குறிப்பிட விரும்ப வில்லை. மேற்கூறிய சொகுசு கார், வெள்ளை சட்டை அடையாளம் எல்லாம் மதுரையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு அத்துப்படி. அந்த நபருக்கு எழுத படிக்க தெரியாது.ஒரு பெரிய சிபாரிசு பேரில் பெரிய ஊடகத்தில் நிருபராக சேர்கிறார்.ஆனால் தனக்கு செய்தி எழுத வராது என்பதை அங்கு வெளிபடுத்த விரும்ப வில்லை. பெரிய நிறுவனம் என்பதால் நாம் கட்டப்பஞ்சாயத்து நடத்தலாம் என்று எண்ணி வசூல் வேட்டையை தொடங்குகிறார். இதில் லஞ்சம் வாங்கும் போது மாட்டிக்கொள்ளக்கூடாது என உடந்தைக்கு அவரது மனைவியையும் சேர்த்துக்கொள்கிறார். அவர் தான் லஞ்சபணத்தை வாங்கி வருவார்.
சரி இப்படி இருக்க முடியாது நிறுவனத்துக்கு செய்தி அனுப்ப வேண்டும்.அப்போது செய்தியை எழுதி அனுப்பும் முறை என்பதால் செய்தியை எழுதி அனுப்புகிறார்.செய்தியில் ஒரு கோர்வை இல்லாமல் , எழுத்துப்பிழை என அனைத்திலும் தவறு நடக்கிறது. இதனை தொடர்ந்து முதல் செய்தி என்று அந்த நிறுவனமும் கண்டுகொள்ள வில்லை. ஆனால் அந்த நபர் அதனை சாக்காக பயன்படுத்திக்கொண்டு வசூல் வேட்டையை ஆரம்பிக்கிறார் . செய்தியை தான் எழுதாமல் வேறு ஒரு நபரை எழுதி சொல்லி அதனை நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.
செய்தி எழுதுபவர் கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர் என்பதால் எழுத்தில் இருக்கும் செய்திக்கும் அந்த நபரின் செய்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை நிறுவனம் கண்டுபிடிக்கிறது.அவரை வேலையை விட்டு தூக்குகிறது. தற்போது இதே நபர் அரசியல் பெயர் கொண்ட ஒரு பத்திரிகையில் இணைகிறார். இதே வசூல் வேட்டையை நடத்தி சம்பாதித்து விடுகிறார். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என்று தன்னை தானே ஆசிரியர் என்று கூறிவிட்டு ஒரு இணைய பத்திரிகையை (எந்த ஒரு அடிப்படை விஷயமும் தெரியாமல் )ஆரம்பிக்கிறார். அதே வசூல் வேட்டை தான் இங்கும் ஆனால் ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால் அப்போது நடந்து சென்று 1000 வாங்கிவிட்டு இப்போது காரில் சென்று 5000 வாங்குகிறார். ஒரு செய்தி எழுத தெரியாது , எந்த செய்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரியாது. சோசியல் மீடியா குறித்தும் எதுவும் தெரியாது.இதனால் தற்போது நிலை என்னவென்றால் இது போன்ற ஊழல் பெருச்சாளிகள் பணம் சம்பாதிக்க பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு மற்றவர்களுக்கு அவமானமாக உள்ளனர்.
தற்போது உள்ள இளையதலைமுறையுடன் மோத முடியவில்லை.அதனால் தான் இத்தனைஆயிரம் பார்வையாளர்களை வைத்துள்ளேன். இணைய செய்தி தளம் வைத்துள்ளேன் என்று கூறி கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டு வருகிறார். இவர் கட்டப்பஞ்சாயத்து நடத்த பத்திரிகையை பயன்படுத்துகிறார். இது இட்டுகட்டப்பட்ட கதை அல்ல உண்மை சம்பவம். தற்போதும் அந்த மனிதர் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு உலாவிக்கொண்டு தான் உள்ளார். இதனை நாம் தட்டிக்கேட்க முடியுமா??? இவர்கள் தங்களது தோற்றத்தை ஆன்மீகவாதியாக மாற்றிகொள்கின்றனர். எதாவது அரசியல் ரீதியாக பிரச்னை என்றால் அப்படியே வலதுசாரி அமைப்புகளுடன் ஒன்றி விடுவது. இது தான் இவர்களின் கேவலமான பிழைப்பு.
ஒரு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார் என்றால் இது போன்ற நபர்கள் தான் கவருக்காக செய்தி சேகரிக்க செல்கின்றனர். பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர்கள் வாங்குவது இல்லை. காரணம் வேலை நிரந்தரம் இல்லை உடனடியாக வேலையை நீக்கிவிடுவார்கள் என்ற பயம் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அப்படி இல்லை , இவர்கள் எல்லாம் தனி நபர் கொண்ட பத்திரிகைகள் தான். கொஞ்சம் காசு பணம் இருப்பவர்கள் தங்களது தொழிலுக்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ள பத்திரிகை நடத்திக்கொண்டு இருகின்றனர்.அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை விளம்பரம் வாங்கி கொடுத்து அதில் வரும் கமிஷன் மட்டும் தான் எடுத்துகொள்ள முடியும். அப்படி இருக்கும் நிலையில் அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது அந்த 200,500 வாங்கி தான் ஆக வேண்டும்.அதனை வாங்கிகொண்டு செய்தி போட வேண்டும் அப்படி அந்த செய்தி வரவில்லை என்றால் மறு தடவை அவருக்கு செய்தியாளர் சந்திப்பின் போதுஅழைப்புவிடுக்கப்படாது. அந்த 500 வாங்குவதற்கும் அடிதடி சண்டை நடக்கும்.
அதனை பார்த்து தான் அமைச்சர்கள் முதல் சாமானியர்கள் வரை பத்திரிகையாளர்களை இழிவாக பார்க்கின்றனர்.காட்சி ஊடகம், அச்சு ஊடகம் நடத்தக்கூடியவர்கள் தங்களது பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுத்திருந்தால் அவர்கள் இப்படி 500 ரூபாய்க்கு அடித்துகொள்வார்களா ??? அப்படி சம்பளம் கொடுக்க முடியாது என்றால் எதற்கு அந்த நிறுவனம் நடத்த வேண்டும் உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளருக்கு குடும்பம் ஏதும் இருக்காதா ?? அவர்களுக்கு குடும்ப செலவு கல்வி செலவு மருத்துவ செலவு இருக்காதா ??? . இவ்வளவு ஏன் வேலை பார்த்த சம்பளத்தை கேட்ட ஒரு பத்திரிகையாளரிடம் ஒரு ஊடகத்தின் நிறுவனர் ஆசிரியர் சொல்லிகொள்ளும் ஒரு முதலாளி கூறிய பதில் நான் சம்பளம் கொடுக்காமல் இருப்பதால் நீங்க தினமும் சோறு சாப்பிடாமலா இருப்பீர்கள் ” என எகத்தாளமாக பதில் கூறுகிறார். இப்படி ஊழல் செய்தியை மறைக்க காசு , அரசு ஊழியரை மிரட்ட காசு , அரசு பத்திரிகையாளர் அட்டைக்கு காசு , செய்தியாளர் சந்திப்பில் காசு என இப்படி ஒரு மீடியா மாபியா பிழைப்பு நடத்திக்கொண்டிருக்க பலி விழுவதோ ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மீது தான். இங்கு தென்தமிழகத்தில் இருந்து ஊடகத்துறைக்குள் நுழைய முயற்சிக்கும் இளையதலைமுறையினர் சிலர் இது போன்ற மாபியாக்களில் சிக்கி ஏமாந்துள்ளனர். ஏன் அரசு அடையாள அட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டால் ஊரில் யாரும் செய்யாததையா நாங்கள் செய்கிறோம் என்று நம்மிடமே வியாக்கியானம் பேசுவர்.
ஆக கார்ப்பரேட் பாட்டாளி பத்திரிகையாளரும், கடைநிலை பாட்டாளி பத்திரிகையாளரும் கடைசி வரை சம்பளத்தை நம்பி நடுத்தர வாழ்க்கையை தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
கருத்து சுதந்திரத்திற்காக பேசும் ஒரு ஊடகவியலாளரால் தனது சொந்த கருத்தை சமூக வலைத்தளத்தில் எழுத முடியாது.காரணம் இங்குள்ள அறிவு ஜீவிகள் அந்த கருத்தை தனிப்பட்ட நபரின் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல் செய்தி நிறுவனத்தின் கருத்து இவர்கள் ஜால்ரா அடிக்கும் அஜண்டாவை கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவார்கள். இப்படி இருக்க ஊடகவியலாளர், பத்திரிகையாளர் எப்படி கருத்தியல் ரீதியாக பேச முடியும். இங்குள்ள ஊடக நிறுவனங்களை செய்தியாளர் சந்திப்பில் சென்றோமா மைக் போட்டோமா என்று இருங்கள் உங்கள் சித்தாந்த கருத்தை அங்கே காட்டாதீர்கள் என்கின்றனர். இன்னும் ஒரு சிலர் நீங்கள் பேப்பர் படித்து அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும்,ஆனால் நிறுவனத்தில் பேப்பர் கிடையாது, குறிப்பிட்ட இரண்டு செய்தி தாள்கள் தான் படிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். இவையும் கட்டுக்கதையல்ல கண்ணால் கண்ட உண்மை சம்பவங்கள்.
இப்போதாவது பத்திரிகையாளர் நியாயம் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். காரணம் இங்கு நான் மேற்கோள் காட்டிய அனைத்து சம்பவங்களும் இங்குள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கு ஊடகவியலாளருக்கும் நடந்திருக்கும் அதனை வெளிக்காட்ட முடியாது.ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் கனத்தை நான் கொஞ்சம் இறக்கி வைத்திருப்பதாக உணர்கிறேன்.
சேவற்கொடி செந்தில்