ஈழத்தமிழர் வரலாறு, தமிழ் மொழி, தமிழ் இனம் மேலும் தமிழ் பண்பாடு போலவே மிகத் தொன்மையானதும், சிறப்பு மிகுந்ததுமாகும். இலங்கைத் தீவும் ஈழத்
தமிழ் பூர்வீகக்குடிகள் பற்றிய அரசியல் விவாதங்களுக்கு பூகோள சான்றுகளும், நிலப்பரப்பு பற்றிய வரலாற்று அறிவியல் தடயங்களும், இலெமூரியா கண்டம் குறித்த சாட்சியங்கள் கூட போதுமானது.
ஆனால், பூகோள மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு புவியியல் மாற்றங்களாலும் இலங்கைத் தீவு இந்தியாவுடன்
இருந்தும் தென் தமிழகத்தில் இருந்தும் சில இருபது கடல் மைல்களுக்கு அப்பால் நகர்ந்ததும், இன அரசியல் காரணங்களுக்காக மானுடவியல் கோட்பாடுகளையும், பூகோள அறிவியல் கூட சிங்கள பெரும்பான்மையும்
புதிய உலக அரசியல் கட்டமைப்புகளும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை அறிவியல் வழியாக பார்க்கவும்,
பரிசிலிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்து
வருகின்றனர்.
நவீன கால அரசியல் கி. பி. 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட உலக அரசியல் மாற்றங்கள்,அரசியல் கோட்பாடுகள், இறையாண்மைத் தத்துவங்கள் என அரசியல் சித்தாந்தங்களை கருத்தாக்கங்களாக நாம்
கையாண்டாலும் ஈழத்தமிழர் நிலம், மொழி, பண்பாடு மேலும் இறையாண்மை சார்ந்த வரலாற்றுச்சான்றுகள் ஈழத்தமிழரின் அரசு – அரசியல் கட்டமைப்புகளோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியேற்ற ஆதிக்கம்
உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலஉரிமைகளைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் இனம், மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கூட மறைத்துவிட்டது.
அத்தகைய கொடுமையான குடியேற்ற வல்லாண்மை இருந்தும்கூட ஈழத்தமிழர்கள் தங்களுடைய மொழியையும் பண்பாட்டையும்
இறையாண்மையையும் இழந்து விட்ட நிலையில்கூட பாதுகாத்து வந்தனர்.
இலங்கைத் தீவில் 16ஆம்
நூற்றாண்டில் துவங்கிய குடியேற்ற ஆதிக்கம் போர்ச்சுகீசிய, டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என 20 ஆம் நூற்றாண்டு வரை இயங்கிய குடியேற்ற
வல்லாண்மை ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்த இறையாண்மையை சிங்களப் பெரும்பான்மைக்கு அடிபணிந்து அரசியல் வெகுமதியாக தாரை வார்த்து
கொடுத்துவிட்டனர். 19ஆம் நூற்றாண்டில் இலங்கைத்தீவில் தமிழர்கள், சிங்களவர் என்ற சமூக இன நிலப்பரப்புகள் கடந்து நிர்வாக ரீதியாக ஒருங்கிணைந்த அரசியல் காரணங்களுக்காகக்
கட்டமைத்தனர் 20-ஆம் நூற்றாண்டில் இலங்கை விடுதலையை நோக்கி நகரும் காலத்தில் கூட தமிழர்களின் ஆளுமையும் இறையாண்மை பார்வையும் அரசியல் சலசலப்புகள் மட்டுமே நிலவியது சிங்கள
பெரும்பான்மை மொழி, மதம், இனம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிங்களவர்கள் ஆளுமையோடு மகாவம்சம் பேரினவாதக் கோட்பாடுகளை விட்டு விலகாமல் இலங்கைத் தீவின் முழுமை
யாகத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்
1948இல் குடியேற்ற வல்லமையிலிருந்து
விடுதலை பெற்ற நாடு இலங்கை என்று நாம் ஏற்றுக்கொண்டால்கூட தமிழர்களின் இறையாண்மை போர்ச்சுகீசிய காலத்திலிருந்து பறிக்கப்பட்டதும்
விடுதலைப் பெற்ற இலங்கையில் சிங்களவர்களின் ஆளுமையின் கீழ் புதைக்கப்பட்டமுறை யாராலும்
மறுக்கமுடியாது பழந்தமிழர்களின் இறையாண்மையையும் இலங்கை அரசியலின் மாற்றங்களையும்
சிங்களது தலைமை மிகத் திறமையாக உள்வாங்கி அரசியல் சாசனத்தையும் உருவாக்கி விட்டார்கள்,
அதோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் நிலம், மொழி,பண்பாடு இவற்றை மக்கள் தாயக பண்புகள் சிறுபான்மையினர் என்னும் ஒரு குமுக அரசியல்
முத்திரையையும் குத்திவிட்டனர். மேலும் சிங்களவர்களின் தொலைநோக்கு அரசியல் பார்வைக்கு உறுதி
செய்யும் வகையில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தார். மலையகத் தமிழர்களின் குடியுரிமையை 1948-லேயே பறிப்பதற்கு முக்கிய காரணம்
அப்போது மட்டுமல்லாமல் எப்போதும் இலங்கை அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாகக்கூடாது என்பதோடு வலிமையான அரசியல் சக்தியாக உருவாகக்கூடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் . மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறித்தல் ஏதோ ஒரு துயர நிகழ்வு மட்டுமே கிடையாது.
விடுதலைக்குப் பின் இலங்கையில. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுரமான அநீதிகளுக்கு எல்லாம் தொடக்கமாகும்.சிங்கள அரசியல்வாதிகளின் தொலைநோக்குப் பார்வையும் சுதந்திர அரசியலும் ஈழத்தமிழர்களைப் பெரும் அளவிற்கு மௌனித்துவிட்டது
சிங்களம் மட்டும் என்ற மொழி வெறிக் கொள்கையும் ,பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைக்குப் பிறகு ஏஎஸ்டபிள்யூ பண்டாரநாயகே பவுத்தமத தீவிரவாதிகளால் 1959-ல் கொல்லப்பட்டதும் ,தமிழர்களின் கல்வி உரிமை திட்டமிட்டு மறுக்கப்பட்டதும் இலங்கை தீவில் மிக ஆழமான இனச்சிக்கல்களுக்கு சிங்களப் பேரினவாதத்தை அடையாளம் காட்டியது.
1948 முதல் 1970 ஆண்டுகள் வரை ஈழத்தமிழர்கள் அதிகாரப் பகிர்விலும் அறப்போரிலும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகம் பெருமளவிற்குத் தெரியத் தொடங்கியது இரண்டு முக்கியமான நிகழ்வுகள். ஈழத்தமிழர்களின் தேசியப் பார்வையையும் இறையாண்மை சார்ந்த அரசியல் கோட்பாடுகளையும் திரும்பக் கொண்டு வந்தனர். முதலாவதாக மே மாதம் 14 ஆம் நாள் 1976 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானமும்,இதே காலகட்டத்தில் அறப்போர் முறைகளில் இருந்து ஆயுதப் போர்க்களத்திற்கும் ஈழத்தமிழர்கள் தயாராக இருப்பதை உணர்த்தும் வகையில் தமிழீழம் விடுதலை கோரி உருவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்களாகும். அதற்குப் பிறகு செயவர்த்தனே தலைமையிலான சிங்கள அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட கருப்பு சூலை இனக்கலவரமும்,தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான வன்முறைகளும் மிகப்பெரிய தாக்கத்தை உலகெங்கும் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல்,ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தமிழீழ விடுதலையையும் அதற்கான ஆயுதமும் அரசியலும் இரண்டறக் கலந்தன. இத்தகைய முக்கியமான அரசியல் மாற்றங்கள் இலங்கையில் நடந்துகொண்டிருந்த காலத்தில் இந்திய அரசியலில் நிகழ்ந்த தலைமை மாற்றங்களும் இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இராசிவ் காந்தியின் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசியல் அணுகுமுறைகளும் தமிழர் குறித்து கையாளப்பட்ட அரசதந்திரக் கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டன. இவ்வாறு தமிழர் நிலைப்பாட்டை எதேச்சையாகக் கையாண்டதில் அமெரிக்காவின் பொருளாதார புவிசார் அரசியலும் ,இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் ஆதிக்கமும் மிகப்பெரிய பங்காற்றின. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்க்கும் மிகப்பெரிய துயர திருப்பு முனைகளுக்கு அச்சாணியாக விளங்கிய காலம் ஆகும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதோடு,இந்திய இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான போராக மாற்றியதில் அன்றைய இலங்கை அதிபர் செயவர்தனேவின் நரித்தனமும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கபடநாடகங்களும் முக்கியப் பங்காகும் . 1991இல் நடந்தேறிய இராசிவ் காந்தியின் கொலையும் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலும் தமிழீழ விடுதலைக்கான நகர்வுகளை தளர்த்தியதோடு சிங்களவரின் அரசதந்திர வலைப்பின்னலில் இந்திய மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் தமிழர்களுக்கு எதிராக ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியது . இந்திய அரசாங்கத்திற்கும் ஈழத்தமிழர்களுக்குமான இடைவெளியும் உலக அரசியல் மாற்றங்களையும் ஒருங்கிணைத்து சிங்கள அரசு நீண்டதொரு போருக்கு அடித்தளமிட்டதோடு இந்திய அரசாங்கத்தின் துணையோடு மேற்கத்திய நாடுகளை ( நோர்வேவின் ஊடாக) நடுவண் பார்வையாளராக வேண்டியது . இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலுமான 2002இல் நிகழ்ந்த அமைதிக்கான ஒப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு புதியதொரு அரசியல் பன்னாட்டு உறவு பாலத்தை உருவாக்கினாலும்,இலங்கை அரசும் அதன் அரசதந்திரக் கோட்பாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை ஊடுருவு பாதையாகத்தான் பார்த்தார்கள் . அதன்படி புதிய போர்முறைகளையும் , சிங்கள இராணுவ ஊடுருவல்களையும் , ஆயுதப் பெருக்கத்தையும் உலக நாடுகளின் மேற்பார்வைகளோடு இலங்கை அரசு முன்னெடுத்துச் சென்றது. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் சோனியா காந்தியின் நிழல் தலைமையின்கீழ் ஆட்சிக்கு வந்த காங்கிரசு அரசாங்கமும்,2005இல் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த இராசபட்சவின் வெற்றியும், உலக நாடுகளின் தொடர் மெளனமும் 2009இல் ஈழத்தமிழர்களுக்குகெதிராக நடத்தப்பட்ட கொடுமையான போருக்கும்,இன அழிப்பிற்கும் வித்துகளாக அமைந்துவிட்டன.
மே 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஆயுதப்போர் இலங்கையின் இனப்பிரச்சினையை கடுகளவும் தீர்க்கவில்லை. அதோடு சிங்களப் பேரினவாதத்தை முழுமையாக வெளிப்படுத்தியது . ஈழத்தமிழரும்,தாய்த் தமிழகமும் உலகத் தமிழரும் முன்பைவிட இப்பொழுது தெளிவான அரசியல் தீர்வுவேண்டி உறுதியாக நிற்கிறோம். தமிழ்ஈழ விடுதலைப் போராட்டம் அறப்போர்,ஆயுதப்போர் என்ற நிலைப்பாடுகளைக் கடந்து அரசியல் புவிசார்-அரசதந்திர வியூகங்களைச் சீர்செய்து, செம்மைப்படுத்துவதற்கான, பிராந்திய-உலக அரசியலையும் திறனாய்வு செய்ய வேண்டிய காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது.
இதற்காக ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய அர்பணிப்புகளையும்,உயிர் கொடைகளையும் , துயர இழப்புகளையும் மேற்கொண்டார்கள் .இத்தகைய துயரமான காலத்திலும் ஈழத்தமிழரின் வீரமும் ,எதிரியிடம் மண்டியிடாத மானமும் தமிழ் ஈழத்தின் இறையாண்மை வேர்களைக் கண்டெடுத்ததோடு சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழரின் இறையாண்மைக் கோட்பாடுகள் புத்துயிர் பெற்றன.
இன்றைய இலக்கை அரசியலில் இராசபக்ச குடும்பத்தினரின் மறுவருகையும், கோத்தபய இராசபட்சேவின் 2019 அதிபர் தேர்தலில் வெற்றியும்,சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியாகத்தான் பார்க்க வேண்டும் . இதன் எதிர்மறையாக ஈழத்தமிழர்கள் உறுதியான தலைவனும் தீர்க்கமான தலைமையும் இல்லாமல் பரிதவித்து கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் புதிய அரசியல் பரிமாணங்களையும் ,புவிசார் – அரசதந்திரக் கோட்பாடுகளையும்,இந்தியப் பெருங்கடலில் தமிழீழத்தின் புவியியல் – அரசியல் பார்வையும் , உலகளவில் தமிழர்களின் மனித வளங்களையும் , ஒருங்கிணைத்து அசைபோடும் பாலைவனத்து ஒட்டகத்தின் பயணம்போல் விடுதலைக் கனவுகளை சுமந்து வானத்து விண்மீன்களின் வழிகாட்டுதலோடும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறையாத விடுதலை என்ற ஆதவனின் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும்.