நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 8
2014 இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தமது தேர்தல் பரப்புரையில் ” நான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் பதினைந்து இலட்சங்களைச் செலுத்துவேன், கருப்பு பணத்தை மீட்பேன் என்றார். ஆனால், நடப்பது என்ன ?
பணமதிப்பு இழப்பை அறிவித்து ஏழைகளின் வங்கிச் சேமிப்பைக் கூட உருவியது தான் மிச்சம். ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஒத்த ரூபாய் இல்லை. ஆனால்,முதலாளிகளின் வங்கிக் கணக்கில் கோடிகோடியாக கொட்டிக் கொண்டு இருக்கிறார். மோடியின் இந்த ஆட்சி காலத்தில் பொதுத்துறை வங்கிகளிலிருந்து முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தாரை வார்க்கப்படுகிறது.
“கடன்” மூலமாக மட்டுமே அதானி மட்டுமல்லாது எல்லா பெரு முதலாளிகளும் மோடி ஆட்சிகாலத்தில் தங்கள் குழுமத்தை உருவாக்கி தங்கள் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தாங்கள் நடத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த மறுக்கின்றன.
மோடி அரசும் முதலாளிகள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்பப் பெறுவதை விட அவற்றை தள்ளுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாது அவர்கள் இந்தியாவை விட்டு தப்பி ஓடுவதற்கு உதவியும் செய்கிறது. காங்கிரஸ் அரசும் இப்படி செய்ததுதான். ஆனால் மோடி அரசு காங்கிரசை விட பல மடங்கு பெரு முதலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2004 முதல் 2014 வரையான பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வராக் கடன் தொகை ரூ.63,503 கோடி. நரேந்திர மோடி பிரதமரானதும் முதல் நிதியாண்டில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 60,197 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு செய்த தள்ளுபடியை கிட்டத்தட்ட ஓராண்டிலேயே செய்தது மோடி அரசு.
2014ல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய். இது, மன்மோகன் சிங்கின் பத்து ஆண்டுகள் தள்ளுபடியை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். அதிகபட்சமாக கொரோனா காலகட்டத்தில் 2019 – 20 நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 924 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 2020 – 21 நிதியாண்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் 5 வங்கிகள் சேர்ந்து ரூ.89 ஆயிரத்து 686 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் எஸ்பிஐ வங்கி மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.34 ஆயிரத்து 402 கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
யூனியன் வங்கி ரூ.16 ஆயிரத்து 983 கோடி கடனையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.15 ஆயிரத்து 877 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.14 ஆயிரத்து 782 கோடியும் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்த வங்கிகள் தான் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனத்துக்கு கடனை அள்ளி வழங்கின.
1,600 கோடி ரூபாய் கடனை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விஜய்மல்லையாவுக்கு அள்ளிக் கொடுத்தது. 800 கோடி ரூபாயை பஞ்சாப் நேஷனல் வங்கியும், 800 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கியும், 650 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் இந்தியாவும், 550 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் பரோடாவும் வழங்கின. அவரோ கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஏழையாகிவிட்டதால் மோடி ஆசியுடன் லண்டனுக்குத் தப்பியோடினார்.
2008-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் தள்ளுபடி 32 ஆயிரம் கோடி, 2014-2022 வரையிலான பாஜக ஆட்சியியில் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடியாகும்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கி மோசடிகளும் அதிகமாகின.
2014-க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2013-14 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில், 10,171 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள், அடுத்த ஆண்டில் 19,455 கோடியாக அதிகரித்தது.
2015-16ல் சற்று குறைந்து 18,699 கோடி ரூபாயாக இருந்த இது, மீண்டும் 2016-17ல் வேகமாக அதிகரித்து 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, 2017-18 ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் உயர்ந்தது.
2018-19இல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தன.
வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தான். இந்தியாவின் மாபெரும் மோசடி.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கச் சென்றபோது, அவருடன் சென்ற இந்திய தொழில் அதிபர்களின் குழுவில் நிரவ் மோடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்.
வங்கியின் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா விதிமுறைகளையும் மீறி மக்களின் சேமிப்புப் பணத்தை நீரவ் மோடி சூறையாடிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் அவரும் மோடியின் ஆசியுடன் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.
வீடியோ கான் நிறுவனர் வேணுகோபால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து ரூ.3,250 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்களின் எண்ணிக்கை 2017 ஜூன் 30ம் தேதிப்படி 9,661 ஆக இருந்தது. இது கடந்த ஜூன் 30ம் தேதியில் 14,886 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற கடன் மோசடி செய்தவர்களுக்கு எதிராக 515 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் 312 பேர் தாங்கள் வாங்கியக் கடன்களைத் திரும்பச் செலுத்தாத வாராக்கடன் மட்டுமே ரூ.1.41 லட்சம் கோடியாக உள்ளது. இதில் அதிகமாக கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்த முதல் 50 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிட வைப்பதற்கே கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
இந்த 50 தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.92,570 கோடி மோசடி செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இந்த 50 மோசடி தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருப்பது மெகுல் சோக்சி.
மெகுல் சோக்சியின் (நீரவ் மோடியின் மாமனார்) கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ.7,848 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெம் சிங் பரானாவின் எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.5,879 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துள்ளது.
சந்தீப் மற்றும் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா சகோதரர்களின் ரெய் அக்ரோ நிறுவனம் ரூ.4,803 கோடியும், கான்காஸ்ட் ஸ்டீல் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடியும், ரிஷி அகர்வாலின் ஏபிஜி ஷிப் யார்டு (குஜராத்) ரூ.3,708 கோடியும், ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் ரூ.3,311 கோடியும்,
ஜதின் மேத்தாவின் வின்சம் டயமண்ட்ஸ் ரூ.2,931 கோடியும், விக்ரம் கோத்தாரியின் ரோட்டோமேக் குளோபல் ரூ.2,893 கோடியும், கோஸ்டல் பிராஜக்ட்ஸ் ரூ.2,311 கோடியும், ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,147 கோடியும் வங்கிகளில் கடன் மோசடி செய்துள்ளனர்.
மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும்மேல் வங்கி மோசடி நடந்துள்ளது. 2015-2019 வரை மட்டும் வங்கிக்கடன் மோசடி செய்த 38 பெருமுதலாளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் விவசாயிகளோ தாங்கள் வாங்கிய விவசாயக் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ADSI அறிக்கையின்படி, 2018 இல் 5,763 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், அதே சமயம் 2019 இல் 5,957 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் 2020 இல் 5,579 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அது கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில், விவசாயம் சார்ந்த துறையில் 4,006 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா (2,016), ஆந்திரப் பிரதேசம் (889), மத்தியப் பிரதேசம் (735) மற்றும் சத்தீஸ்கர் (537) என எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விவசாயத் துறையில் தினமும் 30 பேர் தற்கொலை செய்து கொள்வதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது
2015 ஆம் ஆண்டில் 3000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதில் 2474 பேர் உள்ளூர் வங்கிகளில் கடனை செலுத்தாததால் தற்கொலை செய்து கொண்டதாக என்சிஆர்பி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் உடைமைகள் வங்கிகளால் பறிமுதல் செய்யப்படுவதும், கடனை செலுத்த முடியாத விவசாயிகள் நிதி நிறுவன குண்டர்களால் தாக்கப்படுவதும், ஆபாச வசைச் சொற்கள் மூலம் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
நரேந்திர மோடி ஆட்சியில் கடன் வாங்கும் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதுதான் நரேந்திர மோடியின் ஆட்சியின் சாதனை. முதலாளிகளுக்கு சேவகம் செய்பவராகவும் உழைக்கும் மக்களுக்கு பாதகம் செய்பவராகவும் இருக்கிறார்.
(தொடரும்)