மாடு மேய்க்கறப்போ
நாய்க்கமூட்டு தாத்தாதான்
சொன்னாரு
“வேகுற வேக்காட்ல சாயங்காலம்
மழை பொத்திக்கினு
ஊத்தப்போதுனு”
அந்த செவுலுகெடேரி மட்டும்
எங்கயாவது திருட்டு
மேய்ச்சலுக்கு போயிடும்
பார்த்துக்கினே இருக்கனும்!
பாவம் அதுவும் என்னசெய்யும்
வாய் எட்ற அளவுக்குகூட
புல்லுபூண்டு இல்ல
எல்லாம் தீய்ஞ்சிபோயி கெடக்குது!
சின்னகுட்டிதான் அப்பப்போ
போயி மாட்ட மடக்கினு வருவான்
கத்தாயமூட்டா கரும்பு தோட்டத்துல
போச்சுனா ஊரையே கூட்டி
பஞ்சாயத்து வச்சிருவாங்க!
அஞ்சுகிளாஸ் சித்தப்பாவும்
அல்ராஜி கண்ணனும்
பெரியாகுட்டி முள்தோப்பாதாண்டதான்
ஒக்காந்து கதசொல்வாங்க
அவங்க மாட்டலாம்கூடா
நாங்கதான் மடக்குவோம்
இல்லனா கத சொல்ல மாட்டாங்க!
ஏரிக்கரை ஓடைலதான்
திட்டு திட்டாய் கொஞ்சகொஞ்சம்
தண்ணியிருக்கும்
வாயில்லா ஜீவனுக்கு
அந்த சேத்துத்தண்ணிதான்
தாகம் தீர்க்கும்!
உச்சிவெயில் மெதுமெதுவா
மேற்கால சாய்ஞ்சது
வெள்ளை மேகமெல்லாம்
திடுதிப்புனு கருப்பா மாறுச்சு
எங்கிருந்தோ வந்த ஈரக்காத்து
நெஞ்சாங்குழிய நெறச்சது!
கண்ணமூடி கண்ண
தெறக்குறதுக்குள்ள
சடசடன்னு பேரிரைச்சலோடு
பெருமழை!
மண்வாசனை வெட்டவெளி
எங்கும் தெறித்தது!
செவுலுகெடேரி கருப்புசேங்கன
மொட்டக்கொம்பு எருது
எல்லாம் ஒரே ஓட்டமா ஓடுதுங்க
வீட்டுக்கொட்டாய நோக்கி!
கூடவே சின்னக்குட்டி பன்னீரு
எல்லாரும்தான் ஓடுனாங்க
நான்மட்டும் இன்னமும்
அந்த பெரியாங்குட்டி ஓடையில்;
புதுவெள்ளத்தோடு குதுகலித்த
அந்த மண்வாசனை துள்ளிவரும்
நீரோடு கரைந்திருந்தது!
நாளை பச்சைபுற்கள்
தலைநீட்டும்
காளான்கள் குடைவிரிக்கும்
நண்டுகள் ஊர்வலம் போகும்
ஈசல்கள் சிறகடிக்கும்
வானம்பாடிகள் கானம்பாடும்!
அதோ அந்த புதியவிடியலின்
கனவுகளோடு அந்த இரவுப்பொழுதுகள்
விடிந்திருந்தது
மஞ்சள்வெயில் கூரைகளிலெல்லாம்
வண்ணம் தீட்டியிருந்தது!
பட்டியிலிருந்த ஆடுகளும்
கொட்டகையில் இருந்த மாடுகளும் அந்த ரோபதியம்மன்
களத்துமேட்டில்
ஒன்றையொன்று வருடிக்கொண்டும்
உரசிக்கொண்டும்!
இதோ சொரட்டுக்கொம்பை
தோள்மீது போட்டுக்கொண்டு
கெளம்பிவிட்டார் முனிரத்தினம்
பெரியப்பா
அந்த வம்பலூர் ஏரிக்கரை நோக்கி
அவருக்கான உலகமது
ஏரியின் ஒவ்வொரு அங்குலமும்
அவருக்கு அத்துப்படி
வாழ்க்கையின் ஒவ்வொரு
மணித்துளிகளையும் அந்த
பனைமரங்களோடும்
ஈச்சைமரங்களோடும்
சப்பாத்திக் கள்ளிகளோடும்
கைகோர்த்து நடந்தவர்
இன்று அவரது கால்கள்
முடக்கப்பட்டிருக்கிறது
முதுமையின் கொடுங்கரங்களால்
பாரதக்கொட்டகையின் மூன்று
சுவர்களுக்குள்
அந்த வெட்டவெளியை
அண்ணாந்து பார்த்தபடி!
இதோ நகர வீதியிலிருந்து
புறப்படுகிறது என்கால்கள்
அந்த கற்றாழை வாசங்களை
நோக்கியும்
எங்கள் மண்வாசனை மனிதர்களைத்தேடியும்!
கொத்திகொத்தி தின்னப்பட்டிருக்கிறது
எங்கள் ஆறுகள் ஏரிகள்
குளங்களைப்போலவே
எங்கள் மண்வாசனை மனிதர்களையும்
முதுமையெனும் கோரக்கரங்கள்!
காமராசன் மண்டகொளத்தூர்