எதோ பண்டிகை நாள் போல Happy Women’s Day னு சொல்லிகிட்டு திரியும் மக்களை பார்த்தால் பாவமா இருக்கு. இப்படி பெண்கள் தினங்கள் வைக்க காரணம், பெண்கள் பிரச்சினையின் தீவிரத்தை பற்றி பேசுவதற்காக.
இன்னைக்கு நாம் பார்க்கும் உலகம் ஆண்களே ஆண்களால் ஆண்களுக்காக கட்டமைத்த உலகம். இங்கே பெண் ஆணுக்கு சேவை செய்யும் வேலைக்காரியாகவே இருக்கணும். இந்த கட்டமைப்பு ஏன் இப்படி காலம் காலமா தொடருதுன்னா, இங்கே எல்லா முடிவையும் எடுப்பவர்கள் ஆண்கள். சமூகத்தில் வேலைக்காரியாக, வீட்டின் தலித்தாக பெண்கள் இருப்பதும், முடிவெடுக்கும் இடங்களில் 97% ஆண்கள் இருப்பதுமே நிஜம். ஜனத்தொகையில் 50% இருக்கும் பெண்கள், வெறும் 3% க்கும் குறைவாகவே முடிவெடுக்கும் இடங்களில் இடம்பெற்றுள்ளனர். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை ஆண்களே எடுப்பதில் ஆரம்பித்து, கிராமம் பஞ்சாயத்து (தேர்ந்தெடுத்த பெண் பஞ்சாயத்து தலைவர் பாத்திரம் விளக்குவார், அவரின் கணவர் அந்த பதவி முடிவுகளை எடுப்பார்).
மதங்கள், கோயில், மசூதி, சர்ச்சுகள், மடங்கள், கடவுள்கள், கார்ப்பரேட்டுகள், தொழில்கள், முதலீட்டாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், சினிமா, ரேடியோ, கல்வித்துறை (70% ஆசிரியர்கள் பெண்களாக இருந்தாலும், கல்வி பற்றிய முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் 2% கூட இல்லை), விளையாட்டுத்துறை, விவசாயத் துறை, விஞ்ஞானம்,IAS IPS அதிகாரிகள் (90% ஆண்கள்), மருத்துவம், அரசியல் கட்சிகள் (கட்சி எதிலும் முடிவெடுக்கும் குழுக்களில் 50% பெண்கள் இல்லை, பெரும்பாலும் 98% முதல் 100% வரை ஆண்களே இருக்கின்றனர்), சட்டமன்றம், மந்திரிசபை, பாராளுமன்றம், பொருளாதார முடிவெடுக்கும் குழுக்கள், வங்கிகளின் போர்டுகள் என அனைத்து இடங்களிலும் 97% ஆண்களே அமர்ந்து முடிவெடுக்கிறார்கள்.
இதை விட கொடுமை, சமூக அமைப்புகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர் குழுக்கள், தலித் கம்யூனிஸ்டட் பெரியார் இயக்கங்கள் அமைப்புக்கள் என அனைத்துமே 90% ஆண்களே முடிவெடுக்கும் இடங்களில் வியாபித்து இருக்கின்றனர். இந்த அனைத்து முடிவுகளும் ஒட்டு மொத்த சமூகத்தையும், வடிவமைக்க கூடிய முடிவுகள். உதாரணமாக சட்டசபையில் 50% பெண்கள் இருந்தால், டாஸ்மாக் வந்திருக்குமா? எந்த அளவுக்கு பெண்களை அவர்களின் 50% இடத்தில் இருந்து 3% இடத்துக்கு ஒதுக்கி வைத்ததன் மூலம் நமது அடுத்த தலைமுறையே வீணாகிறது என்று கவனியுங்கள்.
ஏன் பெண்கள் முடிவெடுக்கும் இடங்களில் 50% இல்லை?
படிப்பதில் வேலையில் எல்லாவற்றிலும் பெண்கள் மிகச்சிறப்பாக ஆண்களை விட அதிக மதிப்பெண்ணுடன் மிளிர்வதை பார்க்கிறோம். ஆக இது நிச்சயமாக திறமை குறைபாட்டினால் அல்ல.
உண்மையான காரணம் என்ன?
நாம் பெண்களை வீட்டில் சிறைவைத்து இருக்கிறோம். யார், தான் இருக்கும் இடத்தை தான் முடிவு செய்யவில்லையோ, யார் தான் இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்று வர அனுமதி பெற வேண்டுமோ, யார் எத்தனை மணிக்கு வெளியே போய் வர வேண்டும் என்று தான் முடிவு செய்ய முடியவில்லையோ, அவரை சிறைக்கைதி என்றும், அவர் இருக்கும் இடத்தை சிறை என்றும் சொல்கிறோம். பெரும்பாலான பெண்கள், வீட்டில் சிறையில் இருக்கின்றனர். ஆண்களை விட கம்மியாக படிக்க வேண்டும், கம்மியாக சம்பாதிக்க வேண்டும், குறைவாக புகழடைய வேண்டும் etc etc.. தன் வாழ்க்கை இணையை யாரோ நிர்ணயிப்பார்கள். 25 வயதில் தனது துறையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கணவனுடன் வேறு ஊருக்கு வேறு வேலை பார்த்து கொண்டு அல்லது வேலை விட்டு விட்டு போக வேண்டும். புது இடம் புது மனிதர்களுடன் வாழ்க்கையை புதிதாக துவங்கி ஒரு Comfortable Zoneக்கு வருவதற்குள் குழந்தைகள் அப்படி இப்படி என்று பத்து வருடம் ஓடி மீண்டும் தனது துறைக்குள் கால் பதிப்பதற்குள் தனது துறையை சேர்ந்த சக ஆண்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு தனிச்செயலாளருடன் தனது துறையில் மிக வேகமாக முன்னேறி இருப்பார்.
வீட்டையும் தனது கனவையும் இரண்டு கைகளில் பிடித்தபடி முன்னேற, தனது துறையில் இருக்கும் ஆண்களும் வீட்டில் இருக்கும் ஆண்களும் விடுவதே இல்லை. அவளின் தன்னம்பிக்கை குலையும்படி அலுவலகத்தின் ஒவ்வொரு சூழலிலும் பேசுவதை 90% ஆண்கள் தவறாமல் செய்கின்றனர். இப்படி செய்து தனது 97% முடிவெடுக்கும் இடங்களை ஆண்கள் தக்கவைத்துக் கொண்டு உள்ளனர்.
பெண்களின் மூளை ஆண்களை விட வேகமாக செயல்படுவதாகவும், மேலாண்மை திறன்களாக கருதப்படும் 19 குணங்களில் 17 குணங்கள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் 13% பெண்கள் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் இருந்தாலே போர்கள் குறைவதாக கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு மூளை, வெவ்வேறு ஹார்மோன்கள். ஆண், 10 நிற ஷேடுகளை பார்க்க முடிந்தால் பெண்ணால் அதே காட்சியில் 35 நிற ஷேடுகளை பார்க்க முடிகிறது. வெறும் பார்வையிலேயே மூளையின் வித்தியாசம் இப்படி இருக்கும் போது, இன்னும் எத்தனை எத்தனை ஆணால் பார்க்க முடியாத விஷயங்களை பெண் பார்க்கிறாளோ தெரியாது. ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்ய பெண் மூளையால் முடியும். பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாகவும் அதிக வேலையாட்கள் வேலையில் தொடர்வதாகவும் தரவுகள் சொல்கின்றன.
ஒரு எலியிடம் போய் யாரும் நீ எனக்கு நிகரில்லை நீ என்னை விட குறைவு உன்னை நான் பாதுகாக்க வேண்டும் அறிவுரை சொல்ல வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் பெண்களிடம் நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஆணை விட பெண் கீழே கீழே என்று. குழந்தையில் இருந்தே ஒரு உளவியல் தாக்குதலை குடும்பமாக சேர்ந்து அவள் மீது நடத்துகிறோம். சுதந்திரம் சமத்துவம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்ட தத்துவங்களை வீடு முதல் சுடுகாடு வரை எல்லா இடங்களிலும் அவளுக்கு மறுத்தே வந்திருக்கிறோம். ஒரு தலித்தை அடித்த வீடியோ போட்டால், அனைவரும் உச்சு கொட்டுவார்கள் ஆனால் ஒரு பெண்ணை அவளின் குடும்ப ஆண் அடித்ததாக வீடியோ வந்ததில்லை. குடும்ப பிரச்சினையை வெளியே சொல்லி விட்டதாக அந்த பெண் சமூகத்தால் கடிந்து கொள்ளப்படுவாள்.
தாயாக தாரமாக தமக்கையாக இருப்பதாக ஒவ்வொரு பெண்கள் தினத்திலும் உளரி கொட்டாமல், அது எத்தகைய திறமைவாய்ந்த பெண்களை சமூக பொறுப்புக்களை ஏற்பதில் இருந்து தடை செய்து இருக்கிறது என்று சிந்தியுங்கள். Cooking Cleaning Childcare என்ற 3C யையும் ஆண்கள் சரிசமமாக பிரித்து, பெண்களின் கனவுகளை நிறைவேற்ற முழுதுணையாக இருப்பதன் மூலமே, நாம் நம் பிள்ளைகளுக்கான சிறந்த சமூகத்தை அமைக்க முடியும். இல்லை என்றால், இதே வன்முறை வன்புணர்வு சாராயம் சுரண்டல் இவற்றை தான் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.
சுபத்ரா, India Younited.9894150527