சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் முதுகலை பட்டத்திற்கான பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை கடந்த 1960ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த T.V மகாலிங்கம், K.V.இராமன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த துறையினரால் காஞ்சிபுரம், அரிக்கமேடு,ஆற்பாக்கம், திருவக்கரை, அதியமான் கோட்டை, திருவாமாத்தூர், பாலூர் போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் செய்யப்பட்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு ஜாம்பவான்களை உருவாக்கி பெருமை சேர்த்த இத்துறையில் இன்று பாடமெடுக்க பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் போன்ற எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே உள்ளது. குறிப்பாக நிரந்தர துறைத்தலைவர் நியமிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தற்போது பொறுப்பு துறைத்தலைவராக பணியில் இருக்கும் இணைப் பேராசிரியர் சௌந்தரராஜன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் நிரம்பி வழிகிறது.
கடந்த 62ஆண்டுகளாக பெரும்பாலும் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு வெகுசன மக்கள் மத்தியில் குறைவாக இருந்த காலத்தில் இத்துறையில் மாணவர் சேர்க்கையும் ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. ஆனால் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பெருமளவு இருந்தனர். ஆனால் கடந்த 5ஆண்டுகளின் நிலைமையே வேறு. தமிழகத்தில் வெகுசன மக்கள் மத்தியில் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய ஆளும் அரசு தமிழக தொல்லியலுக்கு ஒதுக்கிடும் நிதி உயர்ந்திருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டிலேயே முதன்மையான பல்கலைக்கழகமாக விதந்தோதப்படும் சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில் பேராசிரியர் பற்றாக்குறைகள், மலிந்து கிடக்கும் ஊழல்கள். மக்களுக்கு அதிகளவில் சென்று சேரும் தொல்லியல் விழிப்புணர்வையும், தமிழக மாணவர்களுக்கு வரலாறு மற்றும் தொல்லியல் மீதான பற்றினையும் பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிடும் சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் இவ்வாண்டு முதல் சுயநிதி படிப்பை துவங்கியிருக்கிறார்கள்.
மெரிட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 7500ரூ கட்டணம் என இரண்டு ஆண்டுக்கு 15000ரூபாயில் வாங்கும் பட்டத்திற்கு ஆண்டுக்கு 67,000ரூ என இரண்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 1,34,000ரூ சுயநிதி படிப்பு கட்டணம். மெரிட் மாணவர்களுக்கு 40இருக்கைகள். சுயநிதி படிப்பிற்கு 20இருக்கைகள். ஆக வருடத்திற்கு முதுகலை படிப்பில் மட்டும் 60மாணவர்களுக்கான இடங்கள் தரப்பட்டாலும் அமர்வதற்கு போதுமான வகுப்பறைகள் கிடையாது. நாற்காலிகள் கிடையாது. பாடமெடுக்க பேராசிரியர்கள் கிடையாது. தற்காற்லிகமாக நியமிக்கப்படும் வருகை பேராசிரியர்களுக்கு மாதம் ஒழுங்காக சம்பளமும் தரப்படுவதில்லை. ஆகையால் ஆண்டுதோறும் வருகை பேராசிரியர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இத்துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆண்டு தொல்லியல் வாத்தியார் ஆகிவிடுகிறார்கள். வகுப்பு எல்லாருக்கும் ஒன்று தான். பாடம் எல்லாருக்கும் ஒன்று தான். ஆனால் நிரந்தர துறைத்தலைவரோ, பேராசிரியர்களோ, துணைப் பேராசிரியர்களோ கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
அதுபோக மெரிட்டில் அப்ளிகேஷன் போட்ட மாணவர்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து, ‘உங்களுக்கு மெரிட்டில் கிடைப்பது கடினம். ஆகையால் சுயநிதி திட்டத்தில் ஒரு அப்ளிகேஷனை போடுங்க’ என மறைமுகமாக மிரட்டி பயம்காட்டி, மாணவர்களின் தொல்லியல் ஆர்வத்தை தூண்டி சுயநிதியில் சேர்க்கையினை நடத்தி முடித்த பின்னரே மெரிட்டுக்கான தேர்வினையே நடத்தினார் என கூறுகிறார்கள் தற்போது படித்துவரும் துறைசார் மாணவர்கள். மெரிட்டில் சேர்ந்திருந்தாலும் சரி, சுயநிதி படிப்பில் சேர்ந்திருந்தாலும் சரி, ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டும் பயிற்சிக்காக மாணவர்களுக்கு அளிக்கப்படும் அகழாய்வுக்கான செலவினங்களை பல்கலைக்கழகம் முன்கூட்டியே ஆண்டு கட்டணத்தில் பெற்றுக்கொண்டாலும் கூட பொறுப்பு துறைத் தலைவர் சௌந்தரராஜன் ஒரு மாணவனுக்கு 4000ரூ என படிக்கும் அத்தனை மாணவர்களிடமும் வசூலித்தே அகழாய்விற்கு அனுப்புகிறார். ஆக அகழாய்வு எனும் பெயரில் ஆண்டுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பெறும் நிதி ஒரு பக்கம், மாணவர்களிடம் வசூலிக்கும் நிதி ஒரு பக்கம். ஆனால் அகழாய்வு செய்யும் இடத்தில் தங்கும் வசதியோ உணவோ கூட நேர்மையாக செய்து தருவதில்லை. ஒரேயொரு வீட்டில் 15,20 நபர்களை தங்க வைப்பது. சமையல் என்கிற பெயரில் மலிவான பொருட்கள், எண்ணெய்களை மார்க்கெட்டில் பேரம் பேசி வாங்கி வந்து மாணவர்களுக்கு செய்து தருவது. அகழாய்வு செய்யும் லேபர் கூலியேன 10 நபர்களுக்கு கணக்கு காட்டிவிட்டு முழுக்க பயிற்சி மாணவர்களை கொண்டே வேலைவாங்கிக்கொள்வது என துறைத் தலைவர் செய்யும் அகழாய்வு அட்ராசிட்டிகள் படுமோசம் என முணுமுணுக்கிறார்கள் இத்துறையின் முன்னாள் மாணவர்கள் சிலர். அதோடு அகழாய்வுக்கான கருவிகள் எல்லாம் கே.வி இராமன் காலத்து கொடை. அதுவே அருங்காட்சியகத்தில் வைத்து இரசிக்க கூடிய அளவு பழமையானது. ஆனால் அவற்றை கொண்டே அகழாய்வுகள் நடந்து வருகிறது. கேம்ப்புக்காக விரிக்கப்படும் தார்பாய் முதற்கொண்டு 50ஆண்டு தொன்மையினை பறைசாற்றும் என்றால் எண்ணிப்பாருங்கள்.
அகழாய்வு முடித்து கிடைத்த பொக்கிஷங்களை பாதுகாக்க தேவையான அளவிற்கு கூட அருங்காட்சியகம் இல்லை. ஏற்கனவே T.V.மகாலிங்கம் மற்றும் கே.வி இராமன் காலத்து பொருட்களையே நேர்த்தியாக பாதுகாக்கும் முயற்சியை கூட இத்துறை தலைவர் இதுநாள் வரை எடுக்கவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் பணம். மெரிட்டில் சீட் வேண்டுமானாலும் பணம். MPhil சீட் வேண்டுமென்றாலும் பணம். PhD சீட் வேண்டுமென்றாலும் பணம். அதேபோல் thesis submission என்றாலும் பணம். அட்டெண்டன்ஸ் இல்லை என்றாலும் 2000ரூ வரை அவருக்கு தண்டம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் போக பாடம் நடத்த அவர் பெரும்பாலும் வரவேமாட்டார். ஆனால் அத்துறையில் அவர் தான் இப்போது ஒரே நிரந்தர teaching staff. ஆனால் அவருக்கோ தொல்லியல் குறித்த அடிப்படையான புரிதல் கூட இல்லை. Chalcolithic என்பதை அவர் இதுநாள் வரையில் charcoal lithic என்றே எடுத்து வருகிறார் எனில் அவரது தொல்லியல் புரிதலை புரிந்துக் கொள்ளுங்கள்.
அடுத்து போட்டாகிராபி துறை. பிரிட்டிஷ் காலத்தில் தொல்லியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட அதே பழைய கேமராக்கள் தான் இன்றும் இத்துறையில் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பார்த்தால் மாணவர்கள் கையில் வைத்துள்ள மொபைல் போன் கேமராவை காட்டிலும் பன்மடங்கு குறைவான தொழில்நுட்ப வசதி கொண்ட கேமராக்களிலேயே போட்டாகிராபி செக்ஷன் இயங்கி வருகிறது. தொல்லியல் ஆய்வுகளில் கூட இதுவே படமெடுக்க பயன்படுகிறது.
நிரந்தர துறைத் தலைவர், பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், நூலக பணியாளர், அருங்காட்சியக காப்பாளர், போதுமான வகுப்பறை வசதி, உட்காரும் நாற்காலிகள், சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர், கணினி வசதியுடனான லேப், முழுநேர நூலக வசதி, அழகான அருங்காட்சியகம் என எதுவும் இத்துறையில் இல்லை. அப்படியே இருக்கும் கொஞ்சநஞ்சமும் மிக மிக மோசமான நிலைமையிலேயே இருக்கிறது.
இந்த நிலை நீடிப்பதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தொல்லியல்துறை மாணவர்களின் கோரிக்கையாகும்.