ஆற்றுத்துறைகளில் கலங்களை இறக்கி மீன்பிடித்தல், வாணிபம் என கடலையும் கடந்து நாகரிகங்களையும், இவ்வுலகையும் செழித்து வளரச்செய்ததில் துறைமுகங்களின் பங்கு அளப்பரியவை. ஆனால் இந்நாளில் துறைமுகம் எனும் பெயரில் மக்களின் வாழ்வதனை அழிக்க வளர்ச்சி திட்டங்கள் எனும் முகமூடியணிந்து வந்ததொரு திட்டத்திற்கு எதிராக மக்களுக்கு அறிவூட்ட கிளர்ந்ததுதான் துறைமுகம் இதழ்.
குளச்சல் பின்னர் இனயம் என்று குமரி மாவட்டத்தின் பசுமைச்சூழலையும் பன்னெடுங்காலமாக தழைத்து நிற்கும் 50- க்கும் மேற்பட்ட கடற்கரை மற்றும் உள்நாட்டு கிராமங்களை, அவர்களது வாழ்வாதாரங்களையும் அழிக்க கிளம்பியதுதான் ஒன்றிய அரசின் கடல்மாலை திட்டத்தின் அங்கமான இனயம் பெட்டக துறைமுக திட்டம். இப்பெருந் திட்டத்தினை எதிர்ப்பதற்கு எளிய கடற்கரை மக்களிடம் போராயுதங்கள் கிடையாது. அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் துணை கிடையாது. ஆனால் கிராம தலைவர்கள், மக்கள், சமுக ஆர்வலர்கள் திரண்டு இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை துவங்கிய சமயத்திலே, தக்க சமயத்திலே துறைமுகம் இதழும் களம் கண்டது.
மக்களிடையே கருத்துக்களை, போராட்ட அனுபவங்களை , வழிமுறைகளை கொண்டு சேர்க்கவும், ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயார் செய்யவும் துறைமுகம் இதழ்க் குழு தீர்மானித்தது. அவ்வண்ணமே விரைவில் போராட்டக்காரர்கள் மற்றும் மக்கள் மத்தியிலே “துறைமுகம்” வலிமையான கருத்தாயுதமாக மாறியது.
மகத்தான இனயம் துறைமுக பெட்டக எதிர்ப்பு காலகட்டங்களில் வீச்சோடு செயல்பட்ட துறைமுகம் இதழின் தலையங்கங்களை தொகுத்து நூலாக கொண்டு வர வேண்டும் என நூலின் ஆசிரியர் கூறியபோதே அந்த செய்திகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தோடு உடனடியாக வேலைகளை துவங்கினோம்.
போராட்டத்தின் பாதையில் பல்வேறு வெற்றி- தோல்விகளுக்கிடையில் மக்களின் மன உறுதியான கலைத்திட அரசும், ஆட்காட்டிகளும் முயன்று கொண்டிருந்தனர். அந்த நெருக்கடியான தருணத்திலும் தூத்துக்குடி வர்த்தக துறைமுக விவகாரங்கள், வல்லார்பாட துறைமுக அனுபவங்கள், ஆய்வுகள், விழிஞம் துறைமுக போராட்ட தோல்வி அனுபவங்கள் என துறைமுக ஆசிரியர் ஆன்றனி கிளாரட்டும், இதழ் குழுவினரும் அந்த இடங்களுக்கு பயணம் செய்து, மக்களை சந்தித்து உண்மைகளை கேட்டறிந்து ஆய்வு செய்து விரிவான கட்டுரைகளை துறைமுகத்தில் வெளியிட்டனர். இந்த தலையங்கங்களும், கட்டுரைகளும் துருவ நட்சத்திரம் போல போராடியவர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுப்பதற்கு எவருமிலர்.
இனயம் பெட்டகத் துறைமுக திட்டத்திற்கு அலுவலகம் திறந்தது, நிலங்களை அளக்க முனைந்தது, போராடியவர்களை சாதி, மதம், ஊர் சொல்லி பிரிக்க முனைந்தது, என்ற அத்துணை எதிர்வேலைகளையும் முறியடித்த மக்களின் வீரஞ்செறிந்த வரலாற்றையும் இந்த தலையங்கங்கள் அழுத்தமாகவே பதிவு செய்கின்றன. சபதம் செய்த அமைச்சர்கள், மிரட்டி பார்த்த அரசியல்வாதிகள், ஒப்பந்தங்களுக்கு அலைந்த பெரிய மனிதர்கள் என இந்த தலையங்கங்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை.
போராட்டத்தின் அவசியம் உணர்ந்து பெருந்திரளாக இளைஞர்கள் களமிறங்கியது இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கியது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இளைஞர்களின் எழுச்சியை ஒருங்கிணைத்ததில் துறைமுகம் இதழ் முகாமையான பங்கு வகித்தது என்பதை இங்கே பதிவு செய்யப்பட வேண்டும்.
மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடும் என எதிர்பார்த்து தோல்வியடைந்த அரசு இனையத்தில் இனி முடியாதென்று குமரிக்கு அருகிலுள்ள கோவளம் பகுதிக்கு மாற்றப்பட்டது. இடம்தான் மாறியது, போராட்டம் ஓயவில்லை. குமரிப் பகுதி மக்களும் ஒன்றுதிரண்டு போராடினர். அதிகார சதிகளுக்கு இணங்க அரசு விதித்த தடையினையும் மீறி , அரசின் பல்வேறு தடுப்பு திட்டங்களையும் உடைத்து மக்கள் வெற்றிகரமாக, நாகர்கோவிலில் மக்கள் களமாடிய நிகழ்வினை தலையங்கம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.
கடற்கரையோர மக்களுக்காக குறிப்பிட்ட போராட்டச் சூழலில் துறைமுகம் இதழ் உருவெடுத்தாலும் இதன் தலையங்கங்கள் காஷ்மீரில் ஆசிபா என்னும் குழந்தை மதவெறியர்களால் வேட்டையாடப்பட்டதை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மிருகங்களை போல சுட்டுக்கொல்லப்பட்டதை, பணமதிப்பிழப்பு அறிவிப்பால் மக்கள் சொல்லொண்ணா இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதையும் பதிவு செய்திருப்பது துறைமுகம் இதழ் தான் வரித்துக் கொண்ட பணியினை தாண்டியும் மக்களுக்கு பணியாற்றி வந்திருப்பதை அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு துவங்கி பல பெரும் போராட்டங்கள் நடந்தேறியதை நாம் அறிவோம்.ஆனால் அநேக போராட்டங்கள் தத்தம் இலக்கினை எட்டாமல் முடிவுக்கு வந்தது. அந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லையே தவிர அவை மக்களுக்கு பெரும் அனுபவமாக மாறிப் போயின.
ஆனால் இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டமோ மிகப்பெரிய வெற்றி பெற்ற போராட்டமாகும். 28000 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட திட்டம் எளிய கடற்கரை மக்களால் விரட்டியடிக்கப்பட்டது என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாடமாகும். இந்தப் போராட்டத்தின் நுணுக்கமான நகர்வுகளை, செழுமையான அனுபவங்களை, இடைவிடா இன்னல்களை, செயல்திறனுடைய உத்திகளை இந்தத் தலையங்கங்கள் மூலமாக நாம் அறிவதென்பது போராட்டத்தின் உள்நுழைந்து அவற்றை உணர்வுபூர்வமாக அறியும் அனுபவமாக மாறிவிடுகிறது.
ஆதலால் இந்தத் தலையங்கங்களை தொகுத்து தமிழ்நாட்டின் பரந்துப்பட்ட மக்களுக்கு அளிப்பதன் வாயிலாக போராட்டத்தின் அனுபவங்களையும் வரலாற்றையும் பரவச்செய்ய வேண்டும் என்னும் அவா, இந்த நூலினை ஆய்தம் வெளியீட்டகமே வெளியிடும் வாய்ப்பு உருவாகியது. இந்த தொகுப்பு நூலினை வெளியிடுவதில் ஆய்தம் வெளியீட்டகம் பெரும் மகிழ்வடைகிறது.
ஆய்தம் வெளியீட்டகம்