Thursday, November 21, 2024 03:11 pm

Subscribe to our YouTube Channel

320,000SubscribersSubscribe
Homeஇந்தியாமுதலாளிகள் - அரசியல்வாதிகள் கூட்டு- க.இரா. தமிழரசன்

முதலாளிகள் – அரசியல்வாதிகள் கூட்டு- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 9

சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் – மாமேதை கார்ல் மார்க்ஸ்

இந்தியாவில் ஒரு கட்சி நடத்த வேண்டுமென்றால் அதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க அது தான் நியதி. அதுவும் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரும் நிதி தேவை. இந்த நிதியை அரசியல் கட்சிகள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தான் பெற்றுக் கொள்கின்றன. எனவே, அவர்களுக்காகச் செயல்பட வேண்டிய நிலை அரசியல்வாதிகளுக்கு, அந்தக் கட்சிகளுக்கு உருவாகிவிடுகிறது.

அதே போல், தங்களுக்கு சாதகமான கட்சி இருந்தால் தான் தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை நாடாளுமன்றத்தில் இயற்றிக் கொள்ள முடியும், பெரும் ஒப்பந்தங்களைத் தங்கள் நிறுவனத்திற்குப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால்   தங்களுக்கு சாதகமான கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிக்கு கோடிக்கணக்கான நிதியை தேர்தல் நேரத்தில் நன்கொடையாக வாரி வழங்குகின்றனர். இது அவர்களுக்குள் ஒரு கூட்டை இயல்பாக உருவாக்கிவிடுகிறது.

அதை விட முக்கியம் இங்குள்ள முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் வளர்ந்து நிற்கின்றனர். எனவே, தலைமை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர் மற்றும் பெரும் முதலாளிகள்  தங்களுக்குள் ஒரு வலை பின்னலை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் அவர்களுக்குள் ஒத்துழைத்து  கொள்கை வகுத்து பெரும் முதலாளிகளுக்கு கொளுத்த லாபங்களை வழங்குகின்றனர். அதன் மூலம்  தனிப்பட்ட முறையில் பல கோடி லஞ்சம் பெறுகின்றனர். தங்கள் கட்சிக்கும்  பல கோடி நிதியை தேர்தல் நன்கொடையாக பெற்றுக் கொள்கின்றனர்.

கார்பரேட்டுகள் சட்டவிரோதமாக அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கான பங்கை சட்டப்படியே பெற்றுக் கொள்ள  கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு கட்சியின் கார்ப்ரேட் சேவையைப் பொறுத்து கார்ப்ரேட்கள் அவர்களுக்கு நிதி வழங்குகின்றன.

இப்படித்தான்  பாரதிய ஜனதா கட்சி, கங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் நிதியாக பல கோடி ரூபாய்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெறுகின்றன.

2012-13 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில்  ரியல் எஸ்டேட் துறையினரிடம் இருந்து 105.20 கோடிகளும், சுரங்கம், கட்டுமானத்துறை, ஏற்றுமதி/இறக்குமதி துறையினரிடம் இருந்து 83.56 கோடிகளும் இரசாயன மற்றும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து 31.94 கோடிகளும் பாஜக பெற்றுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2019-20 நிதியாண்டில் மட்டும் பாரதிய ஜனதா, 2025 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து  720 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற 139 கோடி ரூபாயைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம். காங்கிரஸ் கட்சி 154 நிறுவனங்களிடமிருந்து 133 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஒன்றிய பாஜக அரசால் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.

தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது.

2019-20 நிதியாண்டில் இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா திரட்டிய மொத்த நன்கொடை 2,555 கோடி ரூபாய். இது 2018-19 நிதியாண்டில் பாரதிய ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த 1,450 கோடி ரூபாயைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகம். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு 2018-19 நிதியாண்டில் கிடைத்த நன்கொடையை விட 2019-20 நிதியாண்டில் 17 விழுக்காடு குறைவாகவே கிடைத்துள்ளது.

2018-19-இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் 383 கோடி ரூபாய் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2019-20 நிதியாண்டில் 318 கோடி ரூபாய் என குறைவாகவே பெற்றுள்ளது.

மிகப்பெரிய தேர்தல் அறக்கட்டளைகளில் ஒன்றான ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட், பாஜகவுக்கு ரூ. 209.00 கோடி நன்கொடையாக அளித்துள்ளது, இது 2019-20ஆம் ஆண்டில் ரூ.217.75 கோடியை வழங்கியது, அதேநேரம், ஜெயபாரத் எலெக்டோரல் டிரஸ்ட் தனது மொத்த வருமான ரூ.2 கோடியை 2020-21ல் பாஜகவுக்கு வழங்கியுள்ளது.

2021 – 2022ம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற வருமானம் மொத்தமாக ரூ.3,289.34 கோடி, இதில் ஆளும் பா.ஜ.க கட்சி மட்டும் ரூ.1917.12 கோடி பெற்றுள்ளது. இந்த தொகையில் இருந்து ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி வருமானம் பெற்றும் அதில் ரூ.400.41 கோடியை செலவு செய்துள்ளது. கணக்கில் கொண்டுவரப்பட்ட தொகை தான் இவ்வளவு. அப்படி என்றால் கணக்கில் வராத பணத்தின் மதிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தப் பணத்தை பயன்படுத்தி தான் தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள்.

பாரதிய ஜனதா பெற்றுள்ள  ரூபாய்க்கும், காங்கிரஸ் பெற்ற  ரூபாய்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே கார்ப்பரேட்டுகள் பாரதிய ஜனதா கட்சியை எவ்வளவு தூரம் நம்புகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

2025 கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க. வுக்கும் 134 கார்பரேட் நிறுவனங்கள் காங்கிரசுக்கும் நிதி உதவி அளித்துள்ளதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மோடியின் பா.ஜ.க. உள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட ஒருவரிடமிருந்து நிதி பெற்றிருந்தால், அப்படி நிதி வழங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற  சட்டத்தை  தேர்தல் பத்திரத் திட்டம் – 2018 மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க தேர்தல் நிதியாக பெற்று வருகிறது.

கட்சிக்கு தேவையான நிதியை  தங்கள் கைவசம் உள்ள துறைகளைப் பயன்படுத்தி எப்படி மிரட்டி பா.ஜ.க வசூலிக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனம்.

2020 சனவரியில் பிரபல கட்டுமான நிறுவனர் சுதாகர் ஷெட்டிக்கு சொந்தமான குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை முடிந்தவுடன் குல்மார்க் நிறுவனம் சார்பாக பாரதிய ஜனதாவிற்கு 20 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது.

2014-2015 ஆண்டில் RKW டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி நிதியாக நன்கொடை பெற்றுள்ளனர். இந்நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் நெருங்கிய கூட்டாளி, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி இக்பால் மிர்ச்சி என்றழைக்கப்படும் இக்பால் மேமன் அவருடன் தொடர்புடையது.

சன்பிளிங்க்(SUNBLINK) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு  பா.ஜ.க. ரூ. 2 கோடி ரூபாய் அந்த நிறுவனத்திடமிருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 2 கோடி நன்கொடை அளித்துள்ளது.

தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 2016-17ம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ. 7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

எந்த நிறுவனத்திடம் நிதி பெற வேண்டுமோ அந்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையை மோடி அரசு சோதனைக்கு அனுப்பி விடும். அதே ஆண்டு பல கோடி ரூபாய்  நிதி தானாகவே பா.ஜ.க. கட்சி அலுவலகத்திற்கு தேடி வரும்.

தமக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, அவர்களின் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அனைத்து வகையான தொழில் முறை உதவிகளையும் செய்தும் பா.ஜ.க முதலாளிகளிடம் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது போலவே மிரட்டியும் பா.ஜ.க பணம் சேர்க்கிறது என்பதற்கு மேல கண்டவையே உதாரணம்.

இந்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், மிக பெரும் கார்ப்பரேட்டுகளின் கூட்டு நாட்டை  எந்தளவுக்கு திவாலாக்கியுள்ளது என்பதற்கு சான்று தான் அதானியின் மீதான ஹிண்டன்ஸ் பர்க் அறிக்கையும் அதற்கு பின் உண்டான விளைவுகளும்.

இந்தக் கூட்டணியை குரோனி கேபிடசலிசம் (சலுகை சார் முதலாளித்துவம்)என்று மேற்கத்திய நாடுகளால் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சலுகைசார் முதலாளிகளால் தற்போது இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு மிக பெரும் செல்வாக்கு படைத்தவர்களாக இந்த முதலாளிகள் உருவெடுத்து உள்ளனர்  அரசின் வருடாந்திர பட்ஜெட்டையும் அதன் முக்கிய அம்சங்களையும் தீர்மானிப்பதே இவர்கள் தான். இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்படுகின்றன சில திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இலவச மானியங்கள் ஒழிக்கப்படுகின்றன. இது ஏழைகளை மேலும் ஏழையாக்குகின்றது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த முதலாளிகள் வாங்கும் லட்சக்கணக்கான கோடி கடன்களை இவர்கள் திரும்ப செலுத்துவதே இல்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்திய வங்கித்துறை  பல லட்சம் கோடி நட்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நட்டம் ஏழைகள் வாங்கும் கடனுக்கான வட்டித்தொகை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டப்படுகின்றன. இதனால் பெரும் கடன் சுமையால் ஏழைகள் திண்டாடுகின்றனர்.

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன. இதனால் கடுமையான வேலை இழப்பு ஏற்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. நாட்டின் கனிமவளங்கள் சூறையாடப்படுகின்றன.

தொழிற்சங்க வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

இப்படி எண்ணிலடங்கா ஒடுக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அரசியல்வாதிகளையும் , அதிகாரவர்கத்தையும் தங்கள் கைப்பிடியில் வைத்துக் கொண்டு இந்த நாட்டை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

மோடி பதவியேற்ற நாள் முதல்  ஒட்டுமொத்த இந்தியாவும் கார்ப்ரேட்களின் கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியை நாம் முறியடிக்காவிட்டால் எதிர்காலம் சொல்லொண்ணா துயரத்தோடு முடிவுறும்.

(தொடரும்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments