நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 6
“10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.
20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.
50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்யத் துணிவு கொள்கிறது.
100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.
300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.
தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும்.”
என்று மூலதனம் நூலில் மாமேதை கார்ல்மார்க்ஸ் குறிப்பிடுவதற்கு அப்படியே பொருத்தமானவர் அதானி.
முதலாளித்துவம் வளர்ச்சி அடைவதால் நாடு வளம் பெருகும், வேலை வாய்ப்பு பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதெல்லாம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் விடும் வெறும் கட்டுக்கதை. உண்மையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மக்களை வீதியில் கொண்டு வந்து நிறுத்தும், வில நிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளை வெளியேற்றும், காடுகளைக் கைப்பற்றி பழங்குடியினரை துரத்தும்.
இதற்கு அதானியின் சில நிறுவனங்களினால் நடந்த மக்கள் விரோதச் செயல்களைப் பார்ப்போம்.
அதானி நிறுவனத்தின் துறைமுகம், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள ஹஸிரா என்ற பகுதியில் இயங்கி வருகிறது. அந்த துறைமுகம் முதல் கோதன் கிராமம் வரை சுமார் 28 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக தண்டவாளம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இத்திட்டத்திற்காக 15 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதானியின் விழிஞ்சம் துறைமுகம்
கட்டுமானம் தொடங்கிய பிறகு, கடற்கரை மிகவும் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் 56,000 மீனவ சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. .
கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன.
விழிஞ்சம் பகுதி கடல் அரிப்பு மிகுந்த பகுதி. கடல் அரிப்பு மிகுந்த மற்றும் அழகிய கடற்கரையை கொண்டுள்ள பகுதிகளில் துறைமுகங்களை உருவாக்க வேண்டாம் என்றும் T’ வடிவத்தைப் போல கடற்கரைக்கு செங்குத்தாக ஓர் அமைப்பை உருவாக்கினால், மணல் மேலும் கீழும் நகரும். கடற்கரையோரம் இயற்கையான மணல் நகர்வை கட்டுமானம் தடை செய்கிறது. இங்கு தென்பகுதியில் மணல் குவிந்து கிடக்கும் அதே நேரத்தில் வடக்குப் பகுதியில் நீங்கள் அரிமானத்தைக் காணலாம்” என்று பேராசிரியர் ஜான் குரியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் துறைமுகத்தை எதிர்த்து இன்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கம்பிகள் விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கபடுவதாக அம்மக்கள் போராடுகின்றன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் 2,300 ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, இறக்குமதி நிலக்கரி கொண்டு 1,600 மெகாவாட் மின் உற்பத்தியை 60 கிமீ அப்பாலிருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கு விற்கும் திட்டம் அதானிக்கு பெற்றுத்தரப்பட்டது. இந்தியாவின் நலித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில், அதானியின் அனல் மின் நிலையம் புகுந்ததில் அப்பகுதியின் வாழ்வாதாரமும், நீராதாரமும் வறண்டன. அந்தக் கிராம மக்களுக்காகப் போராடிய அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் யாதவ் ஐந்து மாதம் சிறையில் அடைத்து அதானிக்கு சேவகம் செய்தது மோடி அரசு.
இப்படி 4 அனல் மின்நிலையங்கள் அவற்றுக்கான நிலக்கரி தேவைக்காக 18 நிலக்கரி சுரங்கங்கள் என இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கால்பரப்பி நிற்கிறது அதானி குழுமம்.
முந்த்ரா துறைமுகம் 8000 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் இது. இது தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குள் பல்வேறு சூழலியல் விதிகளை மீறியதாக அதானி குழுமத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் நவினல் கிராம மக்கள், தற்போதுவரை நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதானியின் ஆக்டோபஸ் பிடிக்குள் தமிழகம் மட்டும் தப்பிக்குமா ?
சென்னை, எண்ணூரை அடுத்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்
330 ஏக்கர் பரப்பளவில் தற்போது இருக்கும் அந்தத் துறைமுகத்தை 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அவர்களின் திட்டம். காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு, பழவேற்காடு பகுதியே கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.
கிட்டத்தட்ட 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்களும், 25 வகையான மிதவைப் புழுக்களும், பலவகையான மெல்லுடலிகளும், இறால், நண்டு வகைகளும் அதிகளவில் உற்பத்தியாகின்றன.எண்ணற்ற வலசைப் பறவைகளுக்கும் இயல் பறவையினங்களுக்கும் வாழிடமாக இருக்கின்றது. அவை அழிக்கபட உள்ளது.
கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தில் சூரிய மின் உற்பத்தி வளாகத்தை அமைத்திருக்கிறது அதானி குழுமம். சோலார் பேனல்கள் அமைப்பதற்காக சாயல்குடி, புதூர், காமராஜபுரம் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் 6,000-க்கும் மேற்பட்ட பயன்தரும் தறுவாயிலுள்ள பனைமரங்களை வெட்டி அகற்றிவருகின்றனர். கமுதி குண்டாறு அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது ஒரு நாளைக்கு 2லட்சம் லிட்டர் குண்டாறு ஆறு நதிநீர் சுரண்டப்பட்டு வருகிறது.
8,000 ஏக்கர் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாசனக் கிணறுகள் மூடப்பட்டு, 100 க்கு மேற்பட்ட ஏரி,குளங்கள் மேவப்பட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை, மா, தென்னை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு, 500 ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு அவற்றிலுள்ள விலங்கினங்களை சாகடித்து , 10 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றி விட்டு எட்டு வழி சாலைத் திட்டத்தை யாருக்காக நிறைவேற்றப் போகிறார்கள் ? அதானிக்காகத் தான்.
இந்தியாவோடு மட்டும் அதானி நிற்கவில்லை
அதானி நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாழும் இருபெரும் பூர்வகுடி மக்கள்தான் வாங்கன், ஜகலிங்கோ (Wangan and Jagalingou) இனக்குழுவினர். இயற்கையையும், நீரூற்றுகளையும் புனிதமாகக் கருதும் இவர்களுக்கு குயின்ஸ்லாந்து பகுதி மட்டுமே ஒற்றை வாழ்விடமாக இருக்கிறது. அங்கிருக்கும் சுமார் 2,47,000 ச.கி.மீட்டர் பரப்பிலான கலிலீ ஆற்றுப்படுகைக்கு அடியில் மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பு உள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நிலத்தடிநீர் தட்டுப்பாடு, காற்றுமாசுபாடு போன்ற சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
அதற்கேற்றபடி, பல விஞ்ஞானிகள் அதானியின் சுரங்கம் செயல்பட ஆண்டுக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், அப்படி செயல்பட்டால் சுமார் 297 பில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் இருப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுமட்டுமல்லாமல், தி கிரேட் பேரியர் ரீஃப் (The Great Barrier Reef) கடற்பகுதி வழியாக ராட்சத கப்பல்களில் டன் கணக்கில் நிலக்கரிகளை ஏற்றிச்சென்றால் அங்கிருக்கும் மிகப்பெரிய பவளப்பாறைத் தொகுதிக்கும் பெருமளவு சேதம் உண்டாகும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு இடங்களில் அதானி குழுமம் மின் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டதிலிருந்து ” இலங்கையின் வளம் கொள்ளையிடப்படும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும் என்று கூறி அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!” என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இவையெல்லாம் வெறும் சில உதாரணங்கள் மட்டுமே.
இப்படி அதானி கால் பதிக்கும் இடங்களில் எல்லாம் உழைக்கும் மக்கள் வீதிக்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மோடி அரசின் முழு ஆசியும் இருக்கிறது.
(தொடரும்)