Wednesday, December 4, 2024 12:12 am

Subscribe to our YouTube Channel

327,000SubscribersSubscribe
Homeஇந்தியாபிரதமர் மோடி - அதானி நட்பு- க.இரா. தமிழரசன்

பிரதமர் மோடி – அதானி நட்பு- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 5

2014-ல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக மோடி,  சுமார் 150 பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டார், கிட்டத் தட்ட 2.4 லட்சம் கிலோ மீட்டர் பயணித்தார், அதற்காக அதானி குழும நிறுவனம்  கர்னாவதி ஏவியேஷனின் விமானத்தை மோடிக்கு வழங்கியது.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அதானிக்கு செய்த உதவிக்காக அதானி மோடிக்கு செய்த கைமாறு இது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில்,  ஒடிஸாவில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘தாம்ரா போர்ட்’ துறைமுகம் ரூ.5,500 கோடிக்கு அதானியின் ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனத்தின் கைகளுக்குச் சென்றது.

அடுத்த மூன்று மாதங்களில், உடுப்பியிலுள்ள ரூ. 6,000 கோடி மதிப்புள்ள 1,200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை ‘லான்கோ இன்ஃப்ரா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது.

அடுத்த மூன்று மாதங்களில், ரூ. 4,200 கோடி மதிப்புள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 11,040 மெகாவாட்டாக அந்நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்ந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தி செய்யும் குழுமமாக  அதானி குழுமம் உருவாகியது.

செப்டம்பரில் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். இந்தியாவின் ‘டாப் 10 பணக்காரர்கள்’ பட்டியலில் நுழைந்தார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான் , இஸ்ரேல் என்று  மோடி எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அதில் அதானியும் ஒரு அங்கமாக இருந்தார்.

மோடியுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அதானிக்கு இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தம் கிடைத்தது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்கிற முறையில் பிரிஸ்பன் நகரத்தில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவரோடு கெளதம் அதானியும் சென்றார்.

அதானிக்கு மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

அந்த நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தின் மீது உள்ள எதிர்ப்பு, அதானி மீதுள்ள வாராக்கடன் குற்றச்சாட்டுகள் முதலியவற்றைக் கணக்கிட்டு, வெளிநாட்டு வங்கிகள் அவருக்குக் கடன்தர மறுத்தபோது,
அதற்கான கடனை பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்தார்.

நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்த கையோடு ஒரு டன் ரூ.16,700 என்ற விலையில் 25 லட்சம் டன் ரூ.4,035 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதன் விளைவு நிலக்கரி மூலம் மின்உற்பத்தி செய்வோர் ரூ.20,000 என்ற விலையில் இறக்குமதி நிலக்கரியை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது வழக்கமாக டன் ரூ.1700 முதல் ரூ.2000 என்ற விலையில் வாங்கும் உள்நாட்டு நிலக்கரியை விட 7 முதல் 10 மடங்கு விலை அதிகமானது.

அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க எல்லா மாநில அரசுகளுக்கும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டது

உதாரணத்திற்கு டெண்டரே விடாமல், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்த  நிலக்கரியை டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு கடந்த அ.தி.மு.க அரசு மோடியின் அழுத்தத்தால் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டது.

அதற்கு முன்பு “கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது முக்கியமானது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தை இயக்க  மிக முக்கியமான ஒப்பந்தத்தை அதன் துணை நிறுவனமான காரே பால்மா II கோலினரிஸ் பிரைவேட் லிமிடெட்ட நிறுவனத்துடன் இணைந்து மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் கைப்பற்றியுள்ளது.

இது சுமார் 34 வருடம் காலம் கொண்ட மாபெரும் ஒப்பந்தமாகும். ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 23.6 மில்லியன் டன் நிலக்கரி ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்து, பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புகளை இந்திய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும் என்றபோது அதானி பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியையும் அதானி குழுமம் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு, இயற்கை எரிவாயு துறையில் அதன் வணிகம் விரிவடைந்தது. 2017-ல் சோலார் பிவி பேனல்கள் தயாரிக்கத் தொடங்கியது.

இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அவை அதானியின் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்துக்கு (Adani Enterprises) வழங்கப்பட்டுள்ளன.

மூன்று வருடங்கள் கழித்து, எரிவாயு துறையை அரசு ஊக்குவித்ததைத் தொடர்ந்து, எரிவாயுவை சில்லரை விற்பனை செய்யும் பெரிய தனியார் நிறுவனமான தன்னை தகவமைத்துக் கொண்டது இந்நிறுவனம்.

சூரிய ஆற்றலையும் அதானி விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தான், 2500 ஏக்கர் நில பரப்பில், உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறார் கெளதம் அதானி.

– இப்படி நாம் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

2020 ஆம் ஆண்டு 8.9 மில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 89 பில்லியன் டாலராக உயர்ந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் அதானின் ஒரு நாள் வருமானம் மட்டும் ஆயிரம் கோடியாக இருந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி அபரிதமாக இருந்துள்ளது. 2006-07 நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருமானம் ரூ.16,953 கோடி. இதில் கடன் மட்டும் ரூ.4,353 கோடி. இதுவே 2012-13 நிதியாண்டில், வருமானம் ரூ.47,352 கோடி எனவும் கடன் ரூ.81,122 எனவும் இருந்தது.

மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர்கள். அது தற்போது 137 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்துள்ளது.

(தொடரும்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments