Saturday, November 23, 2024 01:11 pm

Subscribe to our YouTube Channel

321,000SubscribersSubscribe
Homeதமிழ்நாடுகௌசிகா ஆற்றங்கரை சமுதாய வரலாற்று ஆவணங்கள்

கௌசிகா ஆற்றங்கரை சமுதாய வரலாற்று ஆவணங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி சுமார் 50 கி.மீ தூரமே பயணித்து நொய்யலோடு கலக்கிறது கௌசிகா ஆறு எனப்படும் வண்ணாற்றங்கரை ஆறு. இதன் கரையில் மூன்று வரலாற்றுக் கால கோயில்களும் உண்டு. அக்கோயில்கள் கொங்கு சோழர் எனும் கோநாட்டு வம்சத்தவரால் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டன. இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி சமூகங்கள் பொது நீரோட்டத்தில் இணைந்த பொழுது உண்டான சமூகச் சிக்கல்கள், சமூகக் குழுக்களின் எழுச்சி, உரிமைகள் குறித்து பேசும் கல்வெட்டுகளைத் தாங்கியிருக்கும் வரலாற்றுக் கருவூலங்களாகக் கௌசிகா ஆற்றங்கரைக் கோயில்கள் விளங்குகின்றன. இதற்கெல்லாம் மேலாக, இந்த ஆறானது தொல்லியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்க்கிறது. ராபர்ட் புரூஸ் புட் எனும் காலனிய கால நில அளவையாளர்- தொல்லியலாளர் தமிழகம் முழுவதும் பயணித்தக் காலத்தில் ஓரிடம் குறித்து விதந்து பதிவு செய்திருக்கிறார். அவ்விடம் இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலையில் சிற்றோடையாக உருப்பெற்று பல கிளையோடைகளின் கூடுதலால் பரந்த பரப்பிலான காட்டாறாக வடிவம் கொண்டு இன்றையக் கோவில்பாளையம் அருகே ஒரு பெரிய வளைவைச் சந்திக்கிறது. அதன் இருகரைகளிலும் பெரியமேடு இருந்திருக்கிறது. அவ்விடத்திலுள்ள சாம்பல்நிற மண்ணடுக்குகளைத்தான் இராபர்ட் புரூஸ்புட் விதந்து சொன்னது. அவ்விடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்தக் கல்லாயுதங்கள், பழுப்புநிற மட்பாண்ட வகைகளை அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்ந ஆற்றின்  பயணத்தில் அவினாசி அருகில் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படிந்த உயிர்களின் புதைப்படிமங்களும் கண்டறியப்பட்டு, அவை தற்போது கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த ஆற்றின் தொல்லியல் சிறப்புகள்.

தொல்லியல் வரலாற்று ரீதியாக இருப்பைக் கொண்டிருக்கும் கௌசிகா ஆறானது தற்போது அதன் பழைய வடிவத்தை அடையாளங் காணமுடியாத நிலைக்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர் அண்ணன் செல்வராஜ்.‌ கௌசிகா ஆற்றின் பரப்பில் தொல்லியல், கல்வெட்டு தரவுகள் எது கிடைத்தாலும் அவற்றை ஆவணப்படுத்துவதன் வழியே நதியையும் மீட்டெடுக்க முடியும் என்று நம்புபவர். அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு யாக்கை ஆற்றின் இரு கரைகளிலும் கிடைக்கும் தொல்லியல், வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தி வருகின்றது. அந்தப் பயணத்தில் நடுகற்கள், கோயில்கள், தொல்லியல் மேடுகள், புதைப் படிமங்கள் என முப்பதிற்கும் மேற்பட்ட தடயங்களை ஆவணப்படுத்தியதும் அடங்கும்.

சில நாட்களுக்கு முன்பு அண்ணன் செல்வராஜ் அழைத்து இங்கு ஒரு செப்பேடு இருக்கிறது என்றார். அது கோவை மாவட்டம் வாகரையாம்பாளையம் அருகிலுள்ள பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோயில் நிர்வாகத்தாரிடம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது வாருங்கள் என்றிருந்தார். அக்கோயிலில் முன்னரே விஜய நகர மற்றும் திப்பு சுல்தான் காலத்திய நாணயங்கள் இருந்ததை நமது யாக்கை குழு பதிவு செய்திருக்கிறது. வீரராயபணம், மைசூர் உடையார் 5cash, திப்பு சுல்தான் காலத்திய நாணயங்கள் ஆகியன அவற்றிலடங்கும். வீரராய பணம் பொ.ஆ. 1600-1700 வாக்கில் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தவை. தங்கத்தாலான இந்த பணத்தின் பரவல் தென்னிந்தியா முழுமைக்கும் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அண்மையில் கீழடி மற்றும் அகரம் அகழாய்விலும் வீரராய பணம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு நாணயங்களும் பொ.ஆ. 17, 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். இந்த நாணயங்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தாரின் கைவசம் உள்ளது. இந்த நாணயங்கள் ஆவணப்படுத்திய நாளில் காரியக் காளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள கோவில் காட்டில் ஒரு தூண் கல்வெட்டையும் ஆவணப்படுத்தினோம். அக்கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து விட்டது. சில எழுத்துக்களை மட்டுமே அடையாளப்படுத்த முடிந்த வகையில் அது பொ.ஆ. 17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைவுக் கொண்டதாக தெரிகின்றது. “பரிசாவது, கடமை” போன்ற வார்த்தைகளை அடையாளம் காண முடிகின்றது. உரிமை மற்றும் தானம் கொடுத்த தகவல்கள் பதிவாகியிருக்கலாம். எனினும் முழுமையான தரவுகளைப் பெற முடியவில்லை. கரியக்காளியம்மன் கோவில் மூலவராக உள்ள காளி எட்டு கரங்களுடன் கையில் சூலம், அக்னி, கபாலம் ஏந்தியவாறு பழங்குடித் தன்மையுடன் காட்சித் தருகின்றாள். மூலவர் சிற்பம் சுமார் ஐநூறு ஆண்டுகள் மதிக்கத்தக்க சிற்பமைப்பைக் கொண்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நினைவுக்கல் வகை நடுகல் ஒன்றும் உள்ளது. அது சமூகத் தலைவர்கள் நினைவாக வைக்கப்பட்டதாகும்.

தேவாங்கர் சமூகத்தவர் மற்றும் கொங்கு பட்டக்காரர்கள் நிர்வாகத்தைப் பதிவு செய்யும் செப்பேடு.
தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலக்கோட்டை தொய்வின்றி நிரப்புவதற்கு பிற்காலத்தில் கிடைக்கும் சமுதாய ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பிற்கால சமுதாய ஆவணங்களில் காலக்குறிப்புகள் குறித்த குழப்பங்கள் உள்ளன. அவை விவரிக்கும் சமூகப் புகழ்பாடல் ஆய்வாளர்களிடையே செப்பேடுகளின் நம்பகத்தன்மை பற்றிய ஐயப்பாட்டை உருவாக்குகிறது. எனினும் ஒருசில புகழ்பாடும் செய்திகளைத் தவிர்த்துவிட்டு செப்பேடுகள் விவரிக்கும் சமூகத் தரவுகளை மட்டும் கவனத்தில் கொண்டால் அவை தவிர்க்கமுடியாதொரு சமூக வரலாற்று ஆவணங்களாக விளங்குவது புரியும். பாப்பம்பட்டி கரியக்காளியம்மன் கோயில் நிர்வாகத்தாரிடம் உள்ள செப்பேடு பொ.ஆ. 1883 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இதில் சக ஆண்டு, கலியுக ஆண்டு என இரண்டு காலக்குறிப்புகள் பயின்று வந்துள்ளன. அவற்றில் கலியுக ஆண்டும், தமிழ் ஆண்டுக் குறிப்பும் பொ.ஆ. 1883 ல் தெளிவாகப் பொருந்தி வருகின்றது. செப்பேட்டின் எழுத்தமைவும் அந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை மூத்த கல்வெட்டு அறிஞர் திரு இராசகோபால் சுப்பையா உறுதி செய்திருக்கிறார். இந்த செப்பேடு ஆனைகுந்தி பகுதியில் சேணியருக்கும், தேவங்க செட்டியாருக்கும் இடைய நிகழ்ந்த சமூக பிரச்சனைகளையும் அதன்பொருட்டு தேவாங்கரின் ஒரு பிரிவினர் கொங்கு நாட்டு தாராபுரத்திற்கு இடம்பெயர்ந்து வந்ததையும் குறிப்பிடுகிறது. பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டில் இந்த சமூக சிக்கல் எதனால் ஏற்பட்டது என்பது ஆய்விற்குரியது. இங்கு கொங்கு நாட்டில் நாட்டு நிர்வாகம் முழுமைக்கும் பட்டக்காரர்களின் கையிலிருந்ததை செப்பேடு விவரிக்கிறது.

“கொங்கு நாட்டு ராசாக்கள் இருவத்தி நாலு பேரும் இவற்களில் முதன்மையாகிய கிரீடாதிபதி குமார காங்கய மண்ணாடியாரவர்களும் மற்றுமுள்ள நாடாதிபத்தியும் பெற்ற சக்கரைக் கவுண்டாநவர்கள் பல்லவராயக் கவுண்டரவர்கள் தென்கரை நாடு செட்டி வேணாயுடையாக் கவுண்டரவர்கள் பூந்துரை நாடு வாரணவாசிக் கவுண்டரவர்கள்  சேரசங்கும கவுண்டரவர்கள் மற்றுமுள்ள நாடாதிபதி பதிகளும் அனைவரும் கூடிய சமூகமாகிய தாராபுரத்தில் தில்லாபுரியம்மன் சன்னியதானத்தில் யிருந்துகொண்டு தேசத்திலுள்ள தேவாங்கருக்குப் பட்டம் செட்டிமை நேமுகம் பண்ணினபடி முன்னா ளையில்”

கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களில் காடையூர் குமார காங்கேயன், சக்கரைக் கவுண்டர், பல்லவராயக் கவுண்டர், செட்டி வேணாயுடையக் கவுண்டர், பூந்துறை வாரணவாசிக் கவுண்டர், சேரசங்கும கவுண்டர் ஆகியோர் முன்னிலையில் இந்த செப்பேடு ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த குறிப்புகள் கொங்கு நாட்டு பட்டக்காரர்களின் வரலாற்றை எழுதுவதில் பெரிதும் துணைப்புரியும் சான்றாவணம் ஆகின்றது. மேற்குறிப்பிட்ட இரண்டு சமூகத்தாரிடையே அரசின் ஆதரவைப் பெறுவது மற்றும் பெண்களை திருமணம் செய்வது தொடர்பான சமூக சிக்கலில் ஏற்பட்ட பூசலால் தேவாங்கரின் இந்த இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. சந்தாமல்லி செட்டி என்பவர் தேவாங்கரின் சமூகத் தலைவராக சுட்டப்படுகின்றார். இவரின் தலைமையில் தான் தாராபுரத்தில் உள்ள தில்லாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் கொங்கு நாட்டு பட்டக்கரகர்களின் முன்னிலையில் தேவாங்கர் கூடி இருபத்தி நான்கு நாட்டிலுமுள்ள ஊர்களில் தாங்களும் குடியேறிக் கொள்ளவும், செட்டிமை நடத்திக்கொள்ளவும் உரிமைக் கோரியுள்ளனர். கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூடி அவ்வுரிமையை அளித்து ஒப்பிதம் தெரிவித்துள்ளனர். அதன்படி சந்தாமல்லி செட்டி தேவாங்கருக்கெல்லாம் சாதிப் பட்டக்காரராகவும், காங்கேய நாட்டிற்கு வாரணவாசி செட்டியும், தென்கரை நாட்டிற்கு மல்லிசெட்டியும்,  பூந்துரை நாட்டிற்கு மூக்கஞ் செட்டியும், பொங்கலூர்கா நாட்டிற்கு சவுண்டன் செட்டியும், வைய்யாபுரி நாட்டிற்கு முத்தஞ் செட்டியும், மணல்நாட்டிற்கு  நஞ்சிசெட்டியும், தட்டய நாட்டிற்கு சிக்கஞ்செட்டியும், கிளக்கு நாட்டிற்கு லிங்கிசெட்டியும், நல்லுருக்கா நாட்டிற்கு நாகிசெட்டியும், ஆனைமலை நாட்டிற்கு சென்னீசெட்டியும், வாரக்க நாட்டிற்கு அழகிரிசெட்டியும் ஆறை நாட்டிற்கு கம்பங்கூடல் கம்பிசெட்டியும், தலைய நாட்டிற்கு சங்காஞ்செட்டியும், நரைய நாட்டிற்கு சோலை செட்டியும், குருப்ப நாட்டிற்கு கொண்டிசெட்டியும், வெங்கல நாட்டிற்கு குடிசெட்டி, சேல நாட்டிற்கு ராமன் செட்டி, காவொடிக்கி நாட்டிற்கு காமன் செட்டி, அந்தியூர் நாட்டிற்கு மொண்டி செட்டி, கலங்க நாட்டிற்கு கப்பினி செட்டி, ஆத்தூரு நாட்டிற்கு அங்கஞ்செட்டி, குமரி நாட்டிற்கு செலுவ செட்டி, கருவூரு நாட்டிற்கு கரியான் செட்டி எடுவங்க(ஒடுவாங்க) நாட்டிற்கு சோர செட்டியும் செட்டிமை பெறுவதற்குரியவர் என்று முடிவு செய்திருக்கின்றனர். இதன்படி இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளிலும் வாழும் தேவாங்கர் அனைவரும் கல்யாணம், கோயில் சடங்குகள், வரி கட்டுதல் முதலியவற்றில் இவர்களின் சொல்படிக் கேட்டு நடந்துக் கொள்வார் என்றும் இந்த இருபத்துநான்கு நாட்டுச் செட்டிகளும் சாதிபட்டக்கார செட்டியான சந்தாமல்லி செட்டியின் சொல்படிக் கேட்டு நடந்து கொள்வார்கள் என்றும் ஒப்புக்கொண்டு  கையெழுத்திட்டுள்ளனர். ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பெயர்வடைந்து கொங்கு நாட்டிற்கு வந்த சமூகம் தங்களுக்கான உரிமையை இங்கு சமூக அரசியலில் வலுவாக இருந்த சமூகத்தாருடன் கூடிப்பேசி இணக்கமான முறையில் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு தில்லாபுரி அம்மன் மற்றும் அருமணநல்லூர் கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கௌசிகா ஆற்றங்கரையில் அமையப்பெற்றிக்கும் பாப்பம்பட்டி ஊரானது பொ.ஆ. 1500 முதல் பல சமூகங்கள் கூட்டாக வாழ்ந்த ஊராக விளங்கியிருக்கிறது. கௌசிகா ஆற்றங்கரையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துவரும் சூழலில் வரலாற்றுக் காலத்தில் புதிதாக பல சமூகங்கள் இடப்பெயர்வு கண்டு இங்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பல சமூகங்கள் ஓரிடத்தில் வாழும் சூழல் உருவாகும் போதே அவர்களுக்கான சமூக உறவுகள் குறித்த ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் உருவாகின்றது. அதன் பொருட்டே கல்வெட்டு, நாணயங்கள், செப்பேடு போன்ற சமூக ஆவணங்கள் கிடைக்கத் தொடங்குகின்றன.

யாக்கை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments