Friday, January 3, 2025 12:01 am

Subscribe to our YouTube Channel

338,000SubscribersSubscribe
HomeUncategorizedஆரியரும் தமிழரும் - பாகம் 5- விக்கி கண்ணன்

ஆரியரும் தமிழரும் – பாகம் 5- விக்கி கண்ணன்

இதுவரை அகநானூறு, சிலம்பு போன்ற நூல்களை கொண்டு ஆரியர்களையும் தமிழர்களையும் ஆராய்ந்தோம். இந்த பதிவில் பதினெண்மேற்கணக்கு நூல்களான பதிற்றுப்பத்து மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் ‘ஆரிய’ எனும் சொல்லினை குறித்து பார்ப்போம்.

பதிற்றுப்பத்து என்பது சங்ககால சேர அரசர்களை பற்றி ஒரு தொகுப்பாக குறிப்பிடும் நூல். ஒவ்வொரு பத்தும் ஒரு சேர அரசரை போற்றி புகழும். சேர மன்னர்களின் தலைமுறையை வரிசைபடுத்தும் நூல் இது. இந்நூலினை கொண்டு ஆராயுங்கால் ஒரு முக்கியமான வரலாற்று சான்றையும் பார்த்துவிடவேண்டும். அது கரூர் மாவட்டம் புகளூர் என்ற ஊரிலே குகைப்படுகையில் அமைந்திருக்கும் தமிழ் பிராமி/தமிழி கல்வெட்டாகும். அக்கல்வெட்டில்,

“மூதாஅமணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ #ஆதன் செல்லிரும்பொறை மகன் #பெருங்கடுங்கோ மகன் #இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூவரும் பதிற்றுப்பத்தின் கடைசி மூன்று பத்தில்(7,8,9) குறிப்பிடப்படும் சேர அரசர்கள் தான் என்பது கவனிக்கத்தக்கது. இதனைக்கொண்டு இந்நூலின் நம்பகத்தன்மையை ஓரளவு தீர்மானிக்க முடிகிறது. இனி பாடல் வரிகளை கொண்டு ஆராய்வோம்.

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து , இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது. இதில்,

“#ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே”

என ஆரியர்கள் வாழும் இமயம் முதல் குமரி வரை இருந்த நிலப்பரப்பை ஆண்டுவந்த அரசன் நெடுஞ்சேரலாதன் என குமட்டூர் கண்ணனார் பாடுகிறார்.

“பேர்இசை மரபின் #ஆரியர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து”

கூடவே அதே பத்தில் ஆரிய அரசர்களை அடி பணியவைத்ததோடு யவனரையும் இவ்வரசன் பிணித்ததாக பதிவு செய்கிறார்.  செங்குட்டுவனுக்கு முன்பே நெடுஞ்சேரலாதன் ஆரியரையும் யவனரையும் வெற்றிக்கொண்டு இமயத்தில் வில்கொடி நாட்டியது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆரியரும் யவனரும் தனித்தனியாக அடையாளப்படுத்தப்படுவதால் யவனரும் ஆரியரும் ஒருவரல்ல எனும் முடிவுக்கு வரலாம்.

தொடர்ந்து ஐந்தாம் பத்தில் சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவனின் வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளது. இதனை பாடியவர் ’கரணமமைந்த காசறு செய்யுட் பரணர்’ என போற்றப்பட்டுள்ளார். அவர் கண்ணகிக்கு கல்லெடுத்த தகவலையும் ஆரியரின் செருக்கை அடக்கிய தகவலையும் பதிவு செய்கிறார்.

“கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான்நவில் கானம் கணையின் போகி   
#ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை”

இதேபோல் நற்றிணையில் மருதம் திணையில் ஒரு பாடல் ஆரியருடனான போரை குறிப்பிடுகிறது.

“#ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு” – நற்றிணை 170

அதாவது முள்ளூர் என்ற ஊரிலே ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒரு வேற்கு ஓடி ஆங்கு – ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல என குறிப்பிடுகிறது.

அதாவது ஆரியருடனான போரானது வெறும் வடக்கில் மட்டுமே நிகழவில்லை. ஆரியர்கள் தென்னகம் நோக்கி படையெடுத்திருப்பதும் இங்கும் தமிழ் அரசனின் ஒரு வேலுக்கே அவர்கள் அஞ்சி ஓடியிருக்கிறார்கள் என்பதும் எளிதில் புலனாகிறது. (அது நமது ‘வெற்றி #வேல் வீர #வேலாக’ கூட இருக்கலாம் 😉)

சங்க காலம் தொட்டே ஆரிய அரசர்களை (உள்ளூர்/வெளியூர்) வெற்றிக்கொண்டதோடு அதனை பெருமையாக பதிவு செய்திருக்கிறார்கள் தமிழ் மூவேந்தர்கள் என்பதனை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடருவோம்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments