1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக அதானி எண்டர்பிரைசஸ் என்ற ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், இன்று
இந்தியாவிலேயே சுமார் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானியுடையது தான்.
அதே போல இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமும் அதானி குழுமம்தான்.
இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது.
2013-ம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டே செயல்பட்டு வந்த அதானி, இன்று இந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் தங்கள் ஆக்டோபஸ் கால்களை பரப்பியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் நிறுவனத்தை நடத்துகிறார்.
நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா உட்பட 13 துறைமுகங்கள் மற்றும் ஏழு விமான நிலையங்களை நடத்துகிறார். மேலும், டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையை உருவாக்கி வருகிறார்.
இன்றைய தேதியில் இந்தியாவின் சுமார் 260 நகரங்களில் அதானி குழுமம், தனது ஏதோவொரு தொழில் நிறுவனத்தை இயக்கி வருகின்றது. நிலக்கரி துரப்பணம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், கட்டுமானத்துறை, நிதி நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத உற்பத்தி என அதானி குழுமம் கடந்த வெகுசில ஆண்டுகளிலேயே தனது ஆக்டோபஸ் கரங்களால் இந்தியாவை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
அதானியின் வளர்ச்சியை வெறும் மோடியுடன் மட்டும் நாம் பார்த்து விடக்கூடாது. அதானியின் வளர்ச்சியை அரசின் பொருளாதாரக் கொள்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதை அதானின் நேர்காணலோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்
” எனது தொழில் பயணத்தை மொத்தம் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். நான் சொல்வது அனைவருக்கும் கொஞ்சம் சர்ப்ரைஸ் ஆக இருக்கலாம். ஆனால், இதுதான் நிஜம். எனது ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் முக்கிய காரணமாக இருந்தன.
1991-ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் தொழில் சார்ந்தவர்கள் பலன் அடைந்தனர். அதில் நானும் ஒருவன்.” இன்று தனியார் சேனலுக்கு கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் இப்படி அதானி தெரிவித்துள்ளார்.
அதானி சொல்லும் அரசின் கொள்கைகள் என்ன? அதனால் அதானி உள்ளிட்ட முதலாளிகள் அடைந்த லாபம் என்ன ?
1947 இல் இருந்து 1991 வரைக்கும் பின்பற்றப்பட்டு வந்த இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையில்
( சோசலிச பாணியில் நம் இந்தியப் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்று விரும்பினார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு)1991 க்கு பிறகு பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
அந்த மாற்றம் தான் அதானி உள்ளிட்ட பெரும் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டி தந்தது.
1991 முதல் 1996 வரை மத்தியில் ஆட்சி புரிந்த திரு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த ஆரம்பித்தது. அதை முன் நின்று நடத்தியவர் அப்போது நிதி அமைச்சராக பணி புரிந்த மன்மோகன் சிங். .
இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி இந்தியாவிற்குள் தொழில் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை/அல்லது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதும், அரசின் பொறுப்பு என்று கருதப்படும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவதும் இதன் அடிப்படை.
நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பதை உறுதி செய்வது தான் இந்தக் கொள்கை வடிவம்.
புதிய பொருளாதாரக் கொள்கை தனியார்மயம் , தாராளமயம் உலகமயம் என மூன்று வடிவங்களில் செயல்படுத்தப்பட்டது.
தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை பிரிவுகளின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.
பொதுத்துறை உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அனைத்து வங்கிகளாலும் கடன் அள்ளி வழங்கப்பட்டது.
இந்திய தொழில்கள் மூலப்பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
அரசு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்திய சந்தை திறந்து விடப்பட்டது.
எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் திட்டங்கள் நீர்மின் திட்டங்கள் மரபுசாரா ஆற்றல் மூலாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவற்றில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கு உடன் ஒப்புதல் வழங்குவது என ஆற்றலுக்கான அமைச்சகம் முடிவு செய்தது.
1996 அக்டோபரில் துறைமுகத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அரசாங்கம் அனுமதித்தது 74% அந்நிய முதலீட்டுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
சுரங்கத் தொழில்களிலும் தனியார் முதலாளிகள் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது. இப்படி எல்லா துறைகளும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த 18 துறைகள் தவிர்த்து, அனைத்தும் தனியார் முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டது.
இந்தியப் பெருமுதலாளிகளின் சொத்துகள் பல மடங்கு உயரத் தொடங்கின. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது.
முதன் முதலில் பட்டியலிட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை கடந்த 1994-ல் 150 ரூபாயாக இருந்தது, கடந்த மார்ச் 2020 நிலவரப்படி 75,000 ரூபாயாக இருக்கிறது.
அதானியின் குடும்பம் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலுக்கு வந்து சேர்த்தது. அதே நேரம், ஏழை, பணக்காரர்களிடம் மிகப் பெரிய இடைவெளியை தாராளமயமாக்கல் அதிகமாக்கியது.
(தொடரும்)