தோழரே, நலமா?
தலைப்பிலே முரண் இருக்கிறதா ? இருக்கட்டும் ஏனெனில் அதற்கான தேவையிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். கடந்த மடல் ஒன்றில் பேராசிரியர் அவர்களின் “வகுப்புரிமைப் போராட்டம்” “[கம்யூனல் ஜி.ஒ” ]புத்தகத்தினை தொடர்ந்து சமூக நீதி குறித்த இப்போது வரையான சட்டங்கள் குறித்தும், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் தமிழில் எழுதிட வேண்டும் என எழுதியிருந்தேன். அதற்கான தகவல்களையும் திரட்டுகிறேன்.
அப்படி திரட்டும் போது , தொடர்பில்லா ஒர் எண்ணம் தோன்றியது.
ஒர் சட்டத்தினை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என்ற பணியை மட்டும் உயர்நீதி மன்றங்களும் மற்றும் உச்சநீதி மன்றமும் செய்வதில்லை. அந்த சட்டத்தினை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்த பணிதான் அந்த நீதி மன்றங்களின் பெரும் பணியாக உள்ளது.அதை ஆங்கிலத்தில் “Interpretation of statues” என்பார்கள்.
அப்படி சட்டத்தினை பொருள் கொள்வதற்கு அல்லது புரிந்து கொள்வதற்கு பல விதிமுறைகள் உள்ளன.அதில் முக்கியமான ஒன்று, (Golden Rule of interpretation) தங்க விதி என்பதாம். அதாவது சட்டத்தின் கூறுகளை அதனின் சாதாரண பொருள் கொண்டே புரிந்து கொள்ளுதல். சில நேரங்களில் அப்படி பொருள் கொள்ளுதல் கடினமாய் இருந்தால் அல்லது இயலவில்லை என்றால் மற்ற காரணிகளை வைத்து பொருள் கொள்ளுவர்.
இப்படி படித்து கொண்டிருக்கும் போதுதான் அந்த தொடர்பில்லா எண்ணம். அது இதுவே.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல் அனைவருக்கும் தெரிந்ததுதானே. முதல் இரண்டு வரிகளை நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.
இப்பாடலின் பொருள்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
இறப்பதில் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வாழ்வினை வெறுத்து துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்
பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றுதலும் இல்லை
சிறியோரை இகழ்ந்து தூற்றுவது அதனிலும் இல்லை
பெரும் அறிஞர்கள் இப்பாடலை குறித்து பேசியுள்ளனர். பாடலின் பொருள் குறித்து ஏதும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், பெரும்பாலோனோர் கணியன் பூங்குன்றனார் எழுதிய இப்பாடல் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடல் எழுதினார் என்றும் எனவே 2000 ஆயிரம் ஆண்டுகளாய், தமிழ் பெருமக்கள் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற உயரிய பண்பாட்டினை பெற்றிருந்தனர் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
என் கருத்தில், நான் முன்னர் கூறிய (பொருள் கொள்ளுதலில்)தங்க விதியை (Golden Rule) பயன்படுத்தி இப்பாடலை படித்தால், குறிப்பாக”என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,” என்ற வரிகளை படித்தால் , யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்ற பண்பாடு கணியன் பூங்குன்றனாரின் கருத்தல்ல,அவருக்கும் முன்னர் இருந்த தமிழ் சமூகம் ,அதனின் அறிஞர் பெருமக்கள் கண்டு, உணர்ந்து,கடைபிடித்து, அறிவுறுத்திய -பெரும் பண்பாகும் என்பது தெளிவு.அப்படியாயின் இந்த பண்பாடு 2000 ஆண்டுகளாய் தமிழ் சமூகம் கொண்டது என்பது தவறாகும்.அதற்கு முன்னரே பல நெடுங்காலம்,இந்த பெருமைமிகு பண்பாட்டை பெற்றது இச்சமூகம்.
“மின்னொடு வானம் தண்துளி தலைஇ
யானாதுகல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்”, என்று பாடியிருக்கிறார்.
என் புரிதலில், தமிழாசிரியர்கள், இந்த வரிகளை மின்னலோடு, வானம் பொழியும் மழை, பூமியில் இறங்கி ஆறாய் உருவெடுத்து, வளைந்து நெளிந்து செல்லும் போதில், அதனில் பயணிக்கும் படகும் அவ்வாறே வளைந்து செல்வது போல் இயற்கையின்பாற் பட்டே, நம் வாழ்க்கையும் அமையும் என்ற கருத்தை கூறுகின்றனர். அது அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்றாம். அதிலேதும் மாற்று கருத்தினை யாரும் சொல்லிட முடியாது.
ஆனால்,கணியனார்,”கல் பொருதுமிரங்கு மல்லல் யாற்று நீர் வழி” என்று வெறும் ஆறு என்று குறிப்பிடாமல் ‘பேரியாற்று’ என்று ஏன் கூறினார் ? பெரும் ஆறு என்பதை குறிக்கவா என்று ஐயம் தோன்றிய போது நண்பர் விக்னேஷ் சீனிவாசனின் முகநூல் பக்கத்தில் படித்த பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது. அப்பதிவில் தற்போது முல்லை பெரியார் அணை அமைந்திருக்கும் பெரியாறு என்னும் ஆறே சங்க இலக்கியங்களில் பேரியாறு என்று அழைக்கப்பட்டதாய் கூறுகிறார். ஆங்கிலேயர் வருகையினால், உச்சரிப்பு வசதிக்காக பேரியாறு என்பது பெரியாறு என்று மாறியிருக்க வேண்டும்.
பேரியாறு இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு. இதன் நீளம் 300 கி.மீ, இதில் 244 கி.மீ கேரளாவிலும், 56 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது.
பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் சேரர்களின் முசிறித் துறைமுகம் (பட்டணம்) அமைந்திருந்தது. இந்தப் பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”
என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் சேரர் காலத்து ஒப்பந்தம் ஒன்று இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நகல் தற்பொழுது கரூர் அருங்காட்சியகத்திலும் உண்டு. இந்த ஒப்பந்தம் சேர நாட்டில் பேரியாறு (இன்றைய பெரியாறு) முகத்துவாரத்தில் இருந்த முசிறி (கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் அருகே இருக்கும் இன்றைய பட்டணம்) நகர வணிகருக்கும் எகிப்து நாட்டின் நைல் நதியின் முகத்துவார கிரேக்க வணிகருக்கும் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் ஆகும். கிரேக்க மொழியில் இரு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் தமிழ் வணிகர் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின்படி பேரியாறு வழியாக முசிறி துறைமுகத்தில் இருந்து மரக்கலங்களில் சரக்குப் பொதிகள் ஏற்றப்பட்டு அவை செங்கடலில் எகிப்து நாட்டில் இருந்த மியோஸ் கார்மோஸ் (Myos Harmos) என்கிற துறைமுகத்துக்கு சென்றுள்ளன. அங்கே இருந்து கழுதைகள் மூலம் சரக்குகள் கிழக்கு சகாரா பாலைவனத்தை கடந்து நைல் நதிக் கரையில் இருந்த பண்டைய காப்போடோஸ் (Copotos) நகரை அடைந்தன. அங்கிருந்து நைல் நதி வழியாக அலெக்சாண்ட்ரியா நகரை அடைந்தன. அந்தப் பொதிகளின் மதிப்பு அலெக்சாண்ட்ரியாவின் ஒரு நீர்வழிச் சாலையை அமைக்க போதுமானது என்கிறது ஒப்பந்தக் குறிப்பு.
source: https://www.hindutamil.in/news/tamilnadu/37076-.html
மேலும் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் பேரியாறு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன அவற்றுள் சில,
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகநானூறு 62
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகநானூறு 35
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும்
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு –
மதுரைக் காஞ்சி 696
மாற்றரும் தெய்வத்து கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதிற்றுப்பத்து
எனவே, கணியனாரின் பேரியாற்று என்ற சொல் தற்போதைய பெரியாறு ஆற்றை குறிக்கும் என பொருள் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. வரலாற்று அறிஞர்களும்,இலக்கிய பேராசிரியர்களும் இதன் உண்மை பொருள் தருவார்கள் என்று நம்புகிறேன்.
காலத்தினால் அளவிட முடியாத தமிழர் பண்பினை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பேரியாற்றில் துவங்கி எகிப்து, ரோமாபுரி மற்றும் கிரேக்கம் வரை வணிகம் செய்த அந்த பெருமையை, தமிழ் பண்பாட்டை என்றும் பண்பாடுவோம்.
“திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,” என்ற வரிகள் இன்னொறு செய்தியையும் தருகிறது.
சட்டத்தில் பொருள் கொள்ளுதலில் , அதனில் பயன்படுத்திய சொற்றொடர்களை மட்டும் வைத்தே பொருள் கொள்ளுவர். சில வழக்குகளில் சட்டமியற்றிய அவையின் நோக்கம்(Intention of the Legislature) என்பதை ஆய்ந்து அதற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும் என்று வாதங்கள் வைப்பது உண்டு. அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் இந்திய நீதிமன்றங்கள் பெரும்பாலும் இதனை ஒப்புகொள்வதில்லை.
இருப்பினும் கணியன் பூங்குன்றனார், திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் என்று, அதற்கு முன்னர் அவர் எழுதிய வரிகளை தம் கருத்தாக கூறாமல், ஏன் அவை தமக்கு முன்னோர் கண்டு தெளிந்த கருத்துகளாக கூற வேண்டும்? எழுதியவரின் நோக்கம் என்னவாயிருக்கும்? தான் முன்னோர் சொன்ன கருத்துக்களை தன் கருத்துக்களாய் கூறாமல், அவர்களின் பங்களிப்பை போற்றி கூறுவதே தமிழர் மரபு. அதுவே, கணியனாரின் நோக்கமாக இருக்க வேண்டும்.தமக்கு முன்னரே, தமிழர் போற்றிய மரபு என்று நாம் அறிவதற்கே அவர், திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் என்று எழுதியிருக்க வேண்டும். இது தொடர்பாக ,மற்றொரு செய்தி.சில ஆண்டுகளுக்கு முன்னர் மேல சித்தாமூர் சமண ஆலயத்திற்கு, கலை மற்றும் வரலாற்று ஆர்வத்தினால் நண்பர்களுடன் சென்றிருந்த போது அங்கு ஒர் கல்வெட்டின் நகலாக ஒர் பதாகையை பார்த்தேன்.அதில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் ,ஒலிக்கின்ற கழல்களை அணிந்த சோழ மன்னின் புகழ் மிக்க தேவியாகிய காடவர்கோன் பாவை ,இந்த நெடிய நிலப்பரப்பில் பெருமை பொருந்தி விளங்கும் சிற்றாமூரில் , முன்பு செய்யப்பட்ட அறத்தினை மீண்டும் நிலைப்பெறச் செய்து சமண அறங்கள் பெருக வழிவகை செய்தாள் என்ற மொழியாக்கத்துடன் எழுதப் பட்டிருந்தது.
முந்தய அறவழிகள் மட்டுமல்ல, எல்லா சமயங்களையும் ஒன்றாய் போற்றி அவற்றினை பாதுகாத்து வளர்ப்பதுவும் தமிழர் மரபு மற்றும் அறம் என்பது இதனால் தெளிவு. லெய்டன் செப்பேடுகள் என்று அறியப் படும் ராஜேந்திர சோழனின் குறிப்புகளாய் ராஜராஜ சோழன் புத்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகளை காணலாம். முதலாம் குலோத்துங்கனும் தன் செப்பேட்டில் அதனை உறுதி செய்துள்ளார். அந்த செப்பேடுகளும் லெய்டன் அருங்காட்சியகத்தில்தான் உள்ளது. அந்த செப்பேடுகளை ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அழைப்பர். அந்த செப்பேடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்திட வேண்டும் 08/12/2022 அன்று நாடளுமன்ற மேலவையில், வேண்டுகோள் விடுத்துள்ளேன்.ஒன்றிய அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பதிலளித்துள்ளார்.
இந்த நிலத்திலா மதத்தின் பெயரில் ஆட்சியாள முடியும்? கனவிலும் நடவாதன்றோ? கனவு காண அவர்களுக்கு உரிமையுண்டு. தமிழர் மரபினை காத்திட நமக்கு கடமையுண்டு.
ஒன்பது மாதங்கள் அதற்காய் உழைத்திட வேண்டாமா? தமிழர் மரபு, பண்பாட்டை காத்திட தலைவரின். கட்டளைகளையேற்று சேரனாய், சோழனாய்,பாண்டியனாய், பல்லவனின் பரஞ்சோதியாய் தேர்தல் களமாட வேண்டாமா? தூங்கி விட்டால் இனமழிக்கப்படுமென உணர வேண்டாமா?
பண் பாடும் அதே வேளையில் நம் கடமை மறவாமல்,களம் புக தயாராகுங்கள் தோழரே.
N.R. இளங்கோ.
நாடாளுமன்ற உறுப்பினர்.
நன்றி
முரசொலி